சிலம்பு
அரசியல் பிழைத்தோர்க் கெல்லாம்
அறமதே கூற்றாய் மாறும் ;
உரமுள கருத்தை ஞாலம்
உணர்ந்திட உரைத்த நல்ல
தரமுள காதை தந்தே
தரணியை நிமிர்த்தும் ஞான
வரமதாய் சிலம்பை வார்த்தான்
வரகவி இளங்கோ அன்றே !
கற்பதன் பெருமை தன்னை
கண்ணகி வடிவில் ஏற்றி
கற்புநெறி வையம் மேவ
கருத்துடன் சிலம்பை நூற்றுச்
சொற்சுவை அணிகள் கோர்த்துச்
சுந்தரத் தமிழில் யாத்து
நிற்கவே காலந் தோறும்
நிலைத்திடும் சிலம்பு தந்தான் !
ஊழ்வினை உறுத்து வந்தே
ஊட்டிடும் காட்சிக் கண்முன்
சூழ்நிலை களத்தைப் பூட்டிச்
சுழன்றிடும் சிலம்பின் மாட்சி
பாழ்நிலை அடையா வண்ணம்
பண்புடன் தமிழர் வாழ
வாழ்வுளோர் அறிந்து கொள்ள
வகைபட அளித்தான் இளங்கோ !
சிலம்பிலே தமிழர் பண்பு
சிறப்புடன் திகழ்தல் கண்டோம் ;
சிலம்பிலே தமிழர் மாண்பு
சீருடன் ஒளிர்தல் கண்டோம் ;
சிலம்பிலே தமிழர் வாழ்வு
செப்பமாய் மிளிர்தல் கண்டோம் ;
சிலம்பதை நாளுங் கற்றுச்
செம்மொழிப் போற்றி நிற்போம் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக