தேங்காய்
தென்னை மரத்தின் ' தெங்கம்பழம் '
தேங்காய் என்றே அழைப்போமே ;
தின்ன இனிப்புச் சுவைதருமே
தீயின் புண்கள் ஆற்றிடுமே ;
நுண்மி எதிர்ப்பு திறன்மிகுமே
நோய்கள் ஓடி ஒளிந்திடுமே ;
சுண்ணம் , இரும்பு , புரதத்தின்
சுரங்க மாமே தேங்காயே !
தேங்கும் அமில வயிற்றுப்புண்
தேங்காய் உண்ணத் தேறிடுமே ;
தேங்காய் எண்ணெய்த் தடவிவர
திரளும் பொடுகும் ஓடிடுமே ;
தேங்காய் எண்ணெய் முடிவளர்க்கும்
தேமல், படையை நீக்கிடுமே ;
தேங்காய்ப் பாலும் உடல்வளர்த்துத்
தேடி நச்சை நசுக்கிடுமே !
தேங்காய் ' ஓடு' மருந்தாகும்
தேங்காய்ப் பூவும் மருந்தாகும் ;
தேங்காய் இளநீர் மருந்தாகும்
தேங்காய் ' வழுக்கை ' மருந்தாகும் ;
தேங்காய் எண்ணெய்ப் புண்ணாக்கும்
சிறப்பு மருந்தாய்ச் செயல்படுமே ;
தேங்காய்ச் சுவைத்தே உண்போமே
சேரும் நன்மைகள் பெறுவோமே !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக