நீடு துயில் நீக்கவந்த ஞாயிறே !
( தமிழ்மாமணி 'ஆனந்தா' ந.கோவிந்தசாமி அவர்களின் 104 ஆவது பிறந்தநாள் 18.01.2022 )
தும்பை தோற்கும் தூய வெள்ளை
துலங்கும் சிரிப்பைத் தூவுகின்ற ராசரே ;
அம்பை போல விரைந்துச் சென்று
அருமை தமிழை ஆதரித்தத் தீரரே ;
வம்புப் பேசி வாழும் உலகில்
வாய்மை பேசிப் பேரெடுத்தத் தூயரே ;
தெம்பு கொண்டு தேகப் பயிற்சி
தினமும் கண்டே ஆர்ப்பரித்தச் சூரரே !
இளமை தொட்டே இலக்கி யத்தை
ஈர்த்துக் குடித்தே ஈன்றமழை மேகமே ;
வளமை யான குரலின் வீச்சில்
வண்ணத் தமிழை ஒலித்துநின்ற கீதமே ;
தலைமை யேற்றுத் தொண்டில் துயரைத்
தடுக்கப் பாய்ந்தே ஓடிவந்த நேயரே ;
நிலையில் நின்றே ஒழுக்கம் ஓம்பி
நீடு துயிலை நீக்கவந்த ஞாயிறே !
கன்னித் தமிழைக் கம்பர் புகழைக்
கண்ணின் இமையாய்க் காத்துநின்ற வீரரே ;
அன்பர் சங்கர் தாசர் நினைவை
ஆண்டு தோறும் போற்றிவந்த சீலரே ;
இன்பத் தமிழை அள்ளிப் பருகி
இளமை எழிலில் தோன்றிவந்த ஈசரே ;
அன்பு வெள்ளம் புரண்டே ஓடி
ஆனந் தஆறாய்ப் பாய்ந்தெழுந்த நேசரே !
காலைத் தொட்டே காலன் ஓட
கடுமை யான நடைபயில்கோ விந்தரே ;
வேளை தோறும் உணவை அளவாய்த்
தேடும் வேள்வி நிகழ்த்திவென்ற சித்தரே !
தாளை வணங்கி போற்றி நெகிழ்ந்தேன்
தமிழின் இசையைக் கூட்டுகின்ற நாதரே ;
நாளை உலகம் உந்தன் வாழ்வை
நாளும் நாளும் வாழ்த்தியென்றும் பாடுமே !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக