இராதே

இராதே
eradevadassou

வியாழன், 4 ஜனவரி, 2018

ஐயனார் கோவில் முட்டை

யாருமற்ற இரவில்
சுற்றும் முற்றும்
நோட்டம் விட்டபடி
அடியெடுத்து வைக்கிறான்
மஞ்சைப்பைத் துழாவியதில்
வெளிவந்த முட்டை
உதடுகளின் உச்சரிப்பில்
சிலநொடிகள்
உருவேற்றலின் பின்
ஐயனார் குதிரையின்
கால்களில் தஞ்சமடைகிறது
முட்டை வைத்தாகிவிட்டது
யாருக்கு வலிக்கிறதோ? இல்லையோ?
முட்டையிட்டக் கோழிக்கு
கண்டிப்பாய் வலித்திருக்கும் !
- இராதே

சருகுகள்

மெல்லஅடியெடுத்து
வைக்கும்போது
சர் என்றும்
வேகமாக ஓடும்போது
சரசர என்றும் ஒலியுணர்த்தலில்
வலியினைப் பரிமாறிக் கொள்கின்றன
கிளைகளிருந்தபோது
வருடிய காற்றில்
சலசலத்தும்,
சிலிர்த்தும்
புயல்காற்றில்
ஓவென்று கதறியும்
மழையில் நனைந்ததில்
கண்ணீராய்ச் சொட்டியதும்
இளமை கால நினைவுகள்
காய்ந்து உதிர்ந்து
காலடிகளில்
மெறிபட மெறிபட
பட்டறிவில் பிடிபடுகிறது
வாழ்க்கை !
- இராதே

நெசவு

சடசட சடவென
பஞ்சுமேகத்திலிருந்து
நூலெடுத்து
வானத்துக்கும் பூமிக்குமாய்
இழைகளை முடிச்சிட்டுக் கொண்டே
ஏரி , கிணறு , கண்மாயென
எண்ணற்ற அழகியத் தரைவிரிப்புகள்
மலைமகளுக்குத் தாவணியும் ,
துப்பட்டாவுமான அருவிகள்
சில இடங்களில் அலையும்
திரைச் சீலைகள்
இயற்கையின் பச்சைப்
போர்வைக்கு
வெள்ளை கரை வைத்த ஆறுகள்
சின்னச் சின்னத் துண்டுகள் ,
துப்பட்டாக்கள் , ரிப்பன்களென
வாய்க்கால்கள்
கொசுறாகக் குட்டையைக் கைக்குட்டை என வகைவகையாய்
நெய்தது மழை
தான்தோன்றியாக
அனைத்தையும் கிழித்து
கந்தல் துணியாக்கி
வீணடிக்கிறோம் நாம் !
- இராதே

காலை


பகல் முடிய
இரவென்னை இருளுக்கிழுக்க
ஊரடங்க "நள்" ஒலியின்
உளறும் நள்ளிரவில்
எங்கோ கேட்டபடி
நாய்க்குரைக்கும் ஓசை
செவியில் நுழைய
கொறட்டைகளின் போட்டியிலே
தூக்கந் தடுமாறப்
புரண்டு படுக்கையிலே
செருப்பின் சறுக்கல்கள்,
பேச்சுக்கள் முன்பின்செல்ல
குளிர்கால ஏகாதசி
நடுநிசிக் காட்சிகள்
நினைவைத் தூண்டக்
கண்ணிழுக்கும் வேலை
கன்னக்கோல் கள்வர்களின்
கைவரிசை நடப்பறிந்து
முன்னிருக்கும் கதவை
முட்டிப் பார்த்து
முடிந்தவரை தள்ளிவோய்ந்து
பின்னிருக்கும் படுக்கையிலே
மெல்லச் சாய
எதிர்வீட்டுச் சன்னலிலே
விளக்கெரிய வெளிச்சம்பாய
வெளியூர்ச் செல்ல
வாசலிலே சாணமிட்டுக்
கோலம் போட
சர்என்றுச் செய்தித்தாள்
கதவில் மோத
பின்தொடர பால்பைகள்
பொத்தென வீழ
சந்தடிகள் நடமாட்டம்
சகலமும் மேவ
சரி வாரேன் நானென்றுச்
சந்திரன் மறைய
சட்டென விடிந்ததே
காலைப் பொழுது
- இராதே

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

சாராயம்

எடுப்பு

சாராயத்தைக்  குடிக்காதீங்க ! - சரக்குச்
சாராயத்தைக்  குடிக்காதீங்க !                                                                      (சாராயம்)

தொடுப்பு

பூராயத்தை  ஆயும் ! - உன்
புள்ளக்குட்டிகளை  மேயும் !                                                                          (சாராயம்)


முடிப்பு


ஊறுகாயுங்  கேட்கும் ;  நல்உறைக்குங் காரங் கேட்கும் ;
உள்ளேபோயி  உயிரை  வாங்கக்  குடலைப்பதம்  பார்க்கும் ;
தாறுமாற  பேசும் ;  மண்தரையில்  உருள  வைக்கும் ;
தருதலையும்  பார்க்கும்  பார்வை  நெஞ்சத்தையே  தைக்கும் !        (சாராயம்)



சேர்த்தபணங்  கரையும் ;  கை சேருங்காசுங்  குறையும் ;
பார்த்துவைத்த  பெண்ணுங்கூட  கட்டிக்காம  மறையும் ;
ஊத்திக்கிட்ட  உளறும் ;  சொந்த உறவும்நட்பும்  நெளியும் ;
ஊருக்குள்ளே  இருந்த  மதிப்பும்  ஒன்னுஒன்ன  ஒளியும் !                 (சாராயம்)



பள்ளிக்கூட  வகுப்பில்  கூட குடிக்கச் சொல்லிக்  கொடுக்கும் ;
படிப்பில்லாமல்  பசங்க  வாழ்வைப்  போதையேற்றிக்  கெடுக்கும் ;
துள்ளியெழும்  இளைஞர்களின்  தலையில்  கொள்ளி  வைக்கும் ;
துயறுத்தி  வாழ்வில்  துன்பங்  கண்டிடவே  சொக்கும் !                        (சாராயம்)

                                                                                                                                        -- இராதே 



சனி, 5 ஆகஸ்ட், 2017

இயற்கை விளையாட்டு

இயற்கையிடம்  விளையாடாதே !  - உன்
இறுதிமூச்சு  நின்றேவிடும் !
இயற்கை வளம்  நீ சுரண்டாதே !  - அது
இயல்பு நிலையைக்  கொன்றேவிடும் !                                               (இயற்கை)



மழைவெள்ளம்  வீடுகளில்  சூழ்ந்துநின்றது ;
பிழைசெய்த  மனிதர்களின்  தவறு  சொன்னது ;
இழைந்தோடும்  சோகத்தினை  எடுத்து  சொன்னது ;
பிழைப்புநடத்தி  ஏய்க்கும்மனித  குணத்தைச்  சொன்னது !        (இயற்கை)




தினம்தினம்  நீரின்வழி  அடைக்கும்  மாந்தரே
பிணம்மிதக்கும்  சூழ்நிலையை  உணர்ந்து  பாருங்கள் !
பணம்பெருக்க  நிலம்விற்ற  வணிக  மாந்தரே
மனந்திருந்தும்  வழிகண்டு  வாழப்  பழகுங்கள் !                             (இயற்கை)




குளம்குட்டை  ஏரிகளில்  வீடு  கட்டினீர் ;
குதித்தோடும்  நீர்நிலையை  ஒழித்துக்  கட்டினீர் ;
படுபாத  கங்கள்செய்ய  வரிந்து  கட்டினீர் ;
பாழுந்தன்ன  லத்தினிற்கே  கோயில்  கட்டினீர் !                                   (இயற்கை)




வயலைவிற்றுப்   பணத்தைவைத்தே  உணவு  தேடுறார் ;
வயலிலாது  விளையும்பயிரும்  உலகில்  உள்ளதோ ?
முயன்றுமுயன்று  பணத்தைத்தின்றால்  பசியும்  போகுமா ?
வயலும் வாழ்வும் இயற்கை தந்த  பரிசு  தானன்றோ ?                 (இயற்கை)


                                                                                                                           - இராதே

திங்கள், 24 ஜூலை, 2017

தாய்


பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள் அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு


அன்பானவள்  பண்பவள்  அருளானவள்
ஆருயிர்  உளமானவள்  தேனவள்

பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு


பொற்பத  உதைப்பிலே  உள்ளூர
முகநக  நாண  முமிஞ்சி  நெகிழ
அக மகி  ழினிய  உடலோடுயிர்  தந்த
ஆனந்த  அதிசய  அற்புத  தாயே


பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு


அமுத  அமுத  மொழி  இசைபட  மொழிவாள்
ஆம்  ஆம்  மொழிமழை  அழகுற  பொழிவாள்
தவித்த  விழியொடு  பூத்திருந்  தாயே
தாவி  யெழுந்தெனை  அரவணைத்  தாயே
தத்திய  தளிர்நடை  பற்றிய  தாயே
தாயே !  எந்தாயே !  வருவாயே !


பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு
பூ  அன்பு  அவள்  அன்பின்  அரும்பு

                   அவள்  அன்பின்  அரும்பு
                   அவள்  அன்பின்  அரும்பு
                   அவள்  அன்பின்  அரும்பு

                                                                              - இராதே