இராதே

இராதே
eradevadassou

வியாழன், 23 ஜனவரி, 2025

கொடுமை முளைவிடு நெஞ்சர் !

 கொடுமை முளைவிடு நெஞ்சர் !


இந்தியப் பொன்னெழில் நன்னாடே ! - உம்மை

   ஏய்த்துப்பி ழைப்பவ ராரே டி ?

முந்திப் பெருபண மூட்டை கட்டு கின்ற

   முதலாளி வர்க்கத்தின்  எத்த ரடி !

ஒற்றுமை பேணிடும் பொன்னாடே ! - உம்மை

   ஓடேந்த வைப்பவ ராரே டி ?

கற்றுத்தெ ளிந்த கல்மன வஞ்சக

   கறுப்புப் பணப்பேய்ப் பித்த ரடி !

வற்றாதி ருக்கின்ற திண்ணாடே ! - உம்மை

   வறுமையில் தள்ளுவோ ராரே டி ?

பற்றியு றிஞ்சிடும் பன்னாட்டு வணிகத்தைப்

   பல்லாக்கில் தூக்கிடும் மனத்த ரடி !

வீரம்வி ளைகிற தொல்நாடே ! - உம்மை

   வீழ்த்த நினைப்பவ ராரே டி ?

கோரம தவாத கொட்ட மடிகின்ற

   கொடுமை முளைவிடு நெஞ்ச ரடி !

                                   -  இராதே

                                     10.02.2016


( தோழியர் உரையாடல் , தாழிசை )


புதன், 22 ஜனவரி, 2025

புன்மை உலகைப் புதைப்பாய் !

 புன்மை உலகைப் புதைப்பாய் !


கொலைகளவு மதுமங்கை கொடுந்தொழிலில் உழல்கின்ற

நிலைகண்ட சிறுமதியர் நிறங்கண்டு நிலையான

சிலைபோல இருக்காமல் சிறுத்தையெனச் சினம்பொங்கித்

தலைகொய்யத் திறங்கொண்டு கொலைவாளை எடுத்தெழுவாய் !


முனிவர்போல் நடிக்கின்ற முறையற்ற அடியார்கள் 

வனிதையரின் உயர்கற்பை வதைக்கின்ற வருத்தங்கள்

இனிநாட்டில் நடவாமல் இருக்கின்ற வகைசெய்ய

தனிமனித ஒழுக்கங்கள் தழைக்கின்ற நிலையெடுப்பாய் !


கலப்படங்கள் செயுங்கொடியோர் கடத்தல்கள் புரிகின்றோர்

நிலங்களெலாம் மனையாக்கி நிலவணிகம் நடத்துபவர்

கலங்கடிக்கும் தடிகுண்டர் களங்கண்டே உளமகிழ்வோர்

நலங்கெடுக்க உதைகொடுத்து நரம்பறுத்துக் குரல்நெறிப்பாய் !


பழச்சுவையாம் வளர்கல்வி பணங்காய்க்கும் மரமாகக்

குழந்தையர்கள் நுனிநாக்கில் குலாவுகிற மொழியூட்டி

வழங்கிவரும் வெறிச்செயலில் வளர்கின்ற தலைமுறைகள்

இழக்கின்ற இடர்தவிர்க்க இனங்கொண்டு பகைமுடிப்பாய் !


இலங்கையிலே தமிழர்கள் இனமழிய  உயிரழித்த

விலங்கனைய கயவர்கள் வினையறுக்கச் சிலிர்த்தெழுவாய்

புலமைமிகு தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் இழிமதியர்

குலங்கெடுத்துக் குவலயத்தில் குழிதோண்டிப் புதைத்திடுவாய் !


நனிதமிழர் பழகுவழி நயமுடனே சிறந்தெழவே

கனிந்தபழம் குறளோனின் கருத்துவிதை முளைத்தெழவே

அணிவகுத்துத் திரண்டெழுந்தே அறங்காக்கப் புறப்பட்டே

இனிமையுறு பொதுமைநலன் இயல்பமையப் படைத்திடுவாய் !


                                    - இராதே

                                  நவம்பர் 2008


(  கலிவிருத்தம்

   அளவடி

   அடிக்கு 4 சீர் காய்ச்சீர்

    முன்றாஞ்சீர் மோனை

    காய்முன் நிரை - கலித்தளை )


சனி, 18 ஜனவரி, 2025

கொழுப்பு



தயிரைத் தேக்கி உரியில் தொங்கும்

   தாழி போல தோன்றுந் தொப்பை ;

வயிற்றின் அடியில் மெல்ல படியும்

   வளமை மிகுந்த செழுமை  குப்பை ;

பயிற்சி முயற்சி சிறிதும் இன்றி

   பதமாய்ச் சோம்பல் வளர்க்கும் தொம்பை ;

பயின்று முனைந்தால் மறையும் என்று 

   பார்த்துப் பார்த்தே  இழப்போம் தெம்பை !


இடையில் கூடும் ; இடுப்பின் மடிப்பாய்

   இயல்பின் அழகைக் கெடுக்கச் சேரும் ;

தொடையில் குவிந்தே நடக்க முடியாத்

   தொல்லைப் பெருக்குந் துயரம் நேரும் ;

தடையாய் மாறி கரையா திருந்தே

   தவிக்கும் வாழ்வே நாளும் ஊறும் ;

அடைந்துத் தூர்ந்தே குருதி ஓடும்

   அகலங் குறைந்து குழலுஞ் சோரும் !


மூச்சும் இறைக்கும் உடலில் வியர்வை

   முழுதும் பொங்கி ஊற்றாய் முந்தும் ;

கூச்சம் மண்டி ; வெளியில் போக

   குரங்கு மனமும் கண்ணீர் சிந்தும் ;

பேச்சுங் குறையும் ; கவலை பெருகிப்

   பிறழும் மதியும் அடங்கிக் குந்தும் ;

வீச்சே இல்லா மாந்த ராகி

   வெறுப்பே நெஞ்சில் குதித்து நீந்தும் !


            - இராதே

புதன், 8 ஜனவரி, 2025

காலங்கண்ட பொருள்கள்

 காலங் கண்ட பொருள்கள் !


ஆட்டுக் கல்லு ஆடல;

   அம்மி  கல்லு அறைக்கல ;

போட்டுக் குத்தும் உலக்கையும்

   பொடித்துக் கொடுக்கும் உரலையும்

மீட்டெ டுக்க ஆளில்ல

   மீண்டும் கொணர வழியில ;

சட்டிப் பானை மண்குடம்

   சட்ட செய்ய யாருண்டு ?


கட்டுப் பட்டே உழைத்திட

   கடுகு மனமும் விரும்பல ;

முட்டு போடும் சோம்பலில்

   முணுகி உலகம் சுருங்குது ;

கெட்டு போகும் பாரிலே

    கேடு கெட்ட தன்னலம் ;

குட்டிக் கரணம் போடுது

   கொட்ட மடித்தே ஆடுது!


வியந்துப் போற்றும் உழைப்புமே

   விழலுக் கிரைத்த நீரதாய்ப்

பயன்க ளற்றுப் போனது ;

   பாழும் நோயும் சூழுது ;

கயமை பூண்ட உளத்தினால்

   காலங் கண்ட பொருள்களும்

 பயனி லாது மறையுது

   பண்பும் மரபும் மாளுது !


                    - இராதே

                     14.09.2013


அந்தாதி முரசு

 காவடிச் சிந்து


அந்தாதி முரசு


தீந்தமிழ் அந்தாதி முரசு - அறிவில்

அரசு - அன்பின்

சிரசு - உயர்

தேன்தமிழ்க் காத்திடும் பரசு - தவத்

   திருமாலுறை அரங்கன்மகன்

   அருமாதமிழ் கலைமாமணி

செம்மைசீர்க் காலையூர் நாடன் - இவர்

நம்தமிழ் பேணிடும் வேடன் !


சிந்தை மொழியூறும் ஊற்று - கொள்கை

நாற்று - கலைக்

காற்று - மரபு

சிந்தும்பா இசைத்திடும் கீற்று - வேச

   திருமாவளன் உளமேவிய

   அரும்பாவலன் வளமார்கவி

செப்பிடும் வெண்பாவில் பெண்பா ! - புகழ்

அப்பிடும் அந்தாதி வெண்பா !


வெந்தணல் இனமானம் பேசும் - கனல்

கூசும் - படி

ஏசும் - நெய்தல்

வெண்டமிழ்ச் சாமரம் வீசும் - நனி

வியன்மாத்தமிழ் உரமேயென

பயனோடதை நலமேவிட

வெற்றிநெய்யும் நாடன் பாட்டு - அதை

பற்றிடுமே வையங் கேட்டு !


பைந்தமிழ் இவர்பாவில் துள்ளும் - புலமை

அள்ளும் - மேன்மை

உள்ளும் - நாடன்

பாப்புகழ் என்றென்றும் வெல்லும் - நாட்டுப்

   பணிச்சேவையில் நலமோங்கிட

   அணியேசெயும் தனிநாயகன்

பண்புள்ளம் பார்போற்ற வாழ்க ! - வாழ்வில்

ஒண்டமிழ் வாழ்த்துமே சூழ்க !


                             - இராதே

செவ்வாய், 7 ஜனவரி, 2025

பட்டிமன்ற வேழம்

 காவடிச் சிந்து


பட்டிமன்ற வேழம் !


முத்தமிழ் கோவிந்த ராசர் - அன்பில்

ஈசர் - பண்பின்

வாசர் - வைர

முத்து கவிஞரின் நேசர் - உறவின்

முதலாகிய திருமால்மகன்

இதமாகியே பழகுங்குணம்

முந்திடும் நட்பிற்கோர் சிகரம் - ராசு

தந்திடும் பாத்துள்ளும் மகரம் !


மெத்த சொற்சிலம்பம் ஆடி - பொய்மை

சாடி - வாகை

சூடி - புகழ்

மேன்மை யுறும்படி கூடி - பல

மிளிர்மேடைகள் ஒலிவாங்கிகள்

ஒலிக்கும்படி அதிரும்வெடி

வெல்லும் பட்டிமன்ற வேழம் - இவர்

சொல்லுங் கருத்துகள் ஆழம் !


புத்தம்புதுப் பாக்கள் படைப்பார் - பழமை

உடைப்பார் - பகையைப்

புடைப்பார் - சிறுமை

பொங்கும் வழிகளை அடைப்பார் - குற்றம்

புரிவோர்தமைத் தவறேயென

அறியும்படி உரைவீச்சுகள்

பொழியும் வழக்குரை அறிஞர் - தமிழ்

வழியும் இலக்கிய நெறிஞர் !


சித்திர சிவகாமி சூடன் - கொள்கை

நாடன் - மொழி

வேடன் - எளிமை

சேர்த்திடும் நல்லோர்க்குச் சீடன் - தி.கோ

திருமேவிட நலமேபெற

அருள்கூடிட வளமேயுறச்

செப்பிடும் இராதேவின் சிந்து - வாழ்த்து

எப்பவும் மேலிடும்உ வந்து !


             - இராதே

திங்கள், 6 ஜனவரி, 2025

ஊடகம்


 காவடிச் சிந்து


செய்தி ஊடகம்


சீர்மிகுஞ்சு டச்செய்தி வருமாம் - கற்போர்

   சிந்தனையைத் தூண்டிவிட புத்தறிவு தருமாம்

ஊர்மிகுங்க ருத்தாடல் பெறுமாம்  - உலக

   உண்மையினை நாடறிய ஆற்றிடுந்தொண் டாமே !


நல்லுணர்வு செய்திவெளி யிட்டே - அரிய

   நல்லறிவை மக்களுக்கே அடையவழி விட்டே

உள்ளுணர்வு பெறும்செய்தித் தொட்டே - வண்ண

   ஊடகம்நி கழ்த்துகிற  உற்றநற்றொண் டாமே !


புத்தொளிர்ப்பொ துவறிவு பூணாம் - மாந்தர்

   புந்தியிலெ ழுஞ்சியுற புகட்டும்பூந் தேனாம் !

மெத்தஉயர் அறங்களின் தூணாம் - எவரும்

   மெய்யறிவு பெற்றுயர சுற்றும்விண்மீ னாமே !


வன்முறையை ஆதரிக்கும் ஏடோ ? - நாட்டில்

   மண்டிவளர் பாலுணர்வுத் தூண்டுமிதழ்க் கேடோ?

வன்மத்தின் சாதிமதக் கூடோ ? - என

   மாறுநிலை ஓடிவிட  ஏடுகள்செய் வோமே !


வீண்புரளிப் பொய்புரட்டைப் போக்கி - விற்க

   மேன்மையுறு நடுநிலைத் தவறும்வழி நோக்கி

மாண்புகள் இலாசிலரைத் தூக்கிச் - செய்யும்

   மாய்மால வித்தைகளைத் தள்ளுதல்நன் றாமே !


          -  இராதே