இராதே

இராதே
eradevadassou

வியாழன், 23 ஜனவரி, 2025

கொடுமை முளைவிடு நெஞ்சர் !

 கொடுமை முளைவிடு நெஞ்சர் !


இந்தியப் பொன்னெழில் நன்னாடே ! - உம்மை

   ஏய்த்துப்பி ழைப்பவ ராரே டி ?

முந்திப் பெருபண மூட்டை கட்டு கின்ற

   முதலாளி வர்க்கத்தின்  எத்த ரடி !

ஒற்றுமை பேணிடும் பொன்னாடே ! - உம்மை

   ஓடேந்த வைப்பவ ராரே டி ?

கற்றுத்தெ ளிந்த கல்மன வஞ்சக

   கறுப்புப் பணப்பேய்ப் பித்த ரடி !

வற்றாதி ருக்கின்ற திண்ணாடே ! - உம்மை

   வறுமையில் தள்ளுவோ ராரே டி ?

பற்றியு றிஞ்சிடும் பன்னாட்டு வணிகத்தைப்

   பல்லாக்கில் தூக்கிடும் மனத்த ரடி !

வீரம்வி ளைகிற தொல்நாடே ! - உம்மை

   வீழ்த்த நினைப்பவ ராரே டி ?

கோரம தவாத கொட்ட மடிகின்ற

   கொடுமை முளைவிடு நெஞ்ச ரடி !

                                   -  இராதே

                                     10.02.2016


( தோழியர் உரையாடல் , தாழிசை )


புதன், 22 ஜனவரி, 2025

புன்மை உலகைப் புதைப்பாய் !

 புன்மை உலகைப் புதைப்பாய் !


கொலைகளவு மதுமங்கை கொடுந்தொழிலில் உழல்கின்ற

நிலைகண்ட சிறுமதியர் நிறங்கண்டு நிலையான

சிலைபோல இருக்காமல் சிறுத்தையெனச் சினம்பொங்கித்

தலைகொய்யத் திறங்கொண்டு கொலைவாளை எடுத்தெழுவாய் !


முனிவர்போல் நடிக்கின்ற முறையற்ற அடியார்கள் 

வனிதையரின் உயர்கற்பை வதைக்கின்ற வருத்தங்கள்

இனிநாட்டில் நடவாமல் இருக்கின்ற வகைசெய்ய

தனிமனித ஒழுக்கங்கள் தழைக்கின்ற நிலையெடுப்பாய் !


கலப்படங்கள் செயுங்கொடியோர் கடத்தல்கள் புரிகின்றோர்

நிலங்களெலாம் மனையாக்கி நிலவணிகம் நடத்துபவர்

கலங்கடிக்கும் தடிகுண்டர் களங்கண்டே உளமகிழ்வோர்

நலங்கெடுக்க உதைகொடுத்து நரம்பறுத்துக் குரல்நெறிப்பாய் !


பழச்சுவையாம் வளர்கல்வி பணங்காய்க்கும் மரமாகக்

குழந்தையர்கள் நுனிநாக்கில் குலாவுகிற மொழியூட்டி

வழங்கிவரும் வெறிச்செயலில் வளர்கின்ற தலைமுறைகள்

இழக்கின்ற இடர்தவிர்க்க இனங்கொண்டு பகைமுடிப்பாய் !


இலங்கையிலே தமிழர்கள் இனமழிய  உயிரழித்த

விலங்கனைய கயவர்கள் வினையறுக்கச் சிலிர்த்தெழுவாய்

புலமைமிகு தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் இழிமதியர்

குலங்கெடுத்துக் குவலயத்தில் குழிதோண்டிப் புதைத்திடுவாய் !


நனிதமிழர் பழகுவழி நயமுடனே சிறந்தெழவே

கனிந்தபழம் குறளோனின் கருத்துவிதை முளைத்தெழவே

அணிவகுத்துத் திரண்டெழுந்தே அறங்காக்கப் புறப்பட்டே

இனிமையுறு பொதுமைநலன் இயல்பமையப் படைத்திடுவாய் !


                                    - இராதே

                                  நவம்பர் 2008


(  கலிவிருத்தம்

   அளவடி

   அடிக்கு 4 சீர் காய்ச்சீர்

    முன்றாஞ்சீர் மோனை

    காய்முன் நிரை - கலித்தளை )


சனி, 18 ஜனவரி, 2025

கொழுப்பு



தயிரைத் தேக்கி உரியில் தொங்கும்

   தாழி போல தோன்றுந் தொப்பை ;

வயிற்றின் அடியில் மெல்ல படியும்

   வளமை மிகுந்த செழுமை  குப்பை ;

பயிற்சி முயற்சி சிறிதும் இன்றி

   பதமாய்ச் சோம்பல் வளர்க்கும் தொம்பை ;

பயின்று முனைந்தால் மறையும் என்று 

   பார்த்துப் பார்த்தே  இழப்போம் தெம்பை !


இடையில் கூடும் ; இடுப்பின் மடிப்பாய்

   இயல்பின் அழகைக் கெடுக்கச் சேரும் ;

தொடையில் குவிந்தே நடக்க முடியாத்

   தொல்லைப் பெருக்குந் துயரம் நேரும் ;

தடையாய் மாறி கரையா திருந்தே

   தவிக்கும் வாழ்வே நாளும் ஊறும் ;

அடைந்துத் தூர்ந்தே குருதி ஓடும்

   அகலங் குறைந்து குழலுஞ் சோரும் !


மூச்சும் இறைக்கும் உடலில் வியர்வை

   முழுதும் பொங்கி ஊற்றாய் முந்தும் ;

கூச்சம் மண்டி ; வெளியில் போக

   குரங்கு மனமும் கண்ணீர் சிந்தும் ;

பேச்சுங் குறையும் ; கவலை பெருகிப்

   பிறழும் மதியும் அடங்கிக் குந்தும் ;

வீச்சே இல்லா மாந்த ராகி

   வெறுப்பே நெஞ்சில் குதித்து நீந்தும் !


            - இராதே

புதன், 8 ஜனவரி, 2025

காலங்கண்ட பொருள்கள்

 காலங் கண்ட பொருள்கள் !


ஆட்டுக் கல்லு ஆடல;

   அம்மி  கல்லு அறைக்கல ;

போட்டுக் குத்தும் உலக்கையும்

   பொடித்துக் கொடுக்கும் உரலையும்

மீட்டெ டுக்க ஆளில்ல

   மீண்டும் கொணர வழியில ;

சட்டிப் பானை மண்குடம்

   சட்ட செய்ய யாருண்டு ?


கட்டுப் பட்டே உழைத்திட

   கடுகு மனமும் விரும்பல ;

முட்டு போடும் சோம்பலில்

   முணுகி உலகம் சுருங்குது ;

கெட்டு போகும் பாரிலே

    கேடு கெட்ட தன்னலம் ;

குட்டிக் கரணம் போடுது

   கொட்ட மடித்தே ஆடுது!


வியந்துப் போற்றும் உழைப்புமே

   விழலுக் கிரைத்த நீரதாய்ப்

பயன்க ளற்றுப் போனது ;

   பாழும் நோயும் சூழுது ;

கயமை பூண்ட உளத்தினால்

   காலங் கண்ட பொருள்களும்

 பயனி லாது மறையுது

   பண்பும் மரபும் மாளுது !


                    - இராதே

                     14.09.2013