இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

உப்பு

 உப்பு (93) 



 உப்பாம் உப்பாம் உப்புதான் 

 உணவு சுவைக்க உப்புதான் ; 

உப்பே இல்லாப் பண்டமே 

 ஒதுக்கி எறிவார் குப்பையில் ; 

உப்பே உணவுக் கெடாமலே 

 ஒழுங்காய்க் காக்கும் உயர்பொருளாம் ; 

உப்பை அளவாய்ச் சேர்த்துண்டால் 

 உடலின் நலமும் மேம்படுமே ! 



 உப்பால் உமிழ்நீர்ச் சுரந்திடுமே 

 உப்பால் தொற்றுகள் அழிந்திடுமே ; 

உப்பால் ஈறுகள் வலுப்பெறுமே 

 உப்பால் பற்கள் சீர்ப்பெறுமே ; 

உப்பால் தொண்டைப் புண்ணாறும் 

 உப்பால் நரம்பின் செயல்கூடும் ; 

உப்பால் காலுள் வெடிப்புகள் 

 ஒழிந்தே தொல்லைத் தீர்ந்திடுமே ! 

 


உப்பு மிகினுங் கேடுதான் 

 உப்புக் குறைவுங் கேடுதான் ; 

உப்பின் தேவை அறிந்தறிந்தே 

 உப்பை உணவில் சமைக்கலாம் ; 

உப்புக் கரைசல் நஞ்சழிக்கும் 

 உப்புத் தடுக்கும் சத்திழப்பை ; 

உப்பு வெள்ளைத் தங்கமாம் 

 உரிய முறையில் பயன்கொள்வோம் ! 


                                                               - இராதே

அரத்திப் பழம்

 அரத்திப் பழம் (92) 

 (ஆப்பிள்) 



 அரத்திப் பழமே ஆப்பிளாம் 

 அதற்குக் 'குமளி' பெயருண்டாம் ; 

அரத்தி நாளும் உண்பதால் 

 அணுக வேண்டாம் மருத்துவம் ; 

அரத்தி மூளை காக்குமே 

 அரத்தி இதயம் பேணுமே ; 

அரத்தி அழகை, இளமையை 

 அதிக அளவில் கூட்டுமே ! 



 நரம்பும் எலும்பும் வலுப்படும் 

 நன்கு பற்கள் பளிச்சிடும் ; 

விரட்டும் பக்க வாதத்தை 

 விலக்கும் குருதிச் சோகையை ; 

மிரட்டும் புற்று நோய்களை 

 மிரண்டே ஓடச் செய்யுமே ; 

அரட்டும் மலத்தின் சிக்கலை 

 அறுக்கும் பழமே அரத்தியாம் ! 



 தொண்டை , வாயின் நுண்மிகள் 

 தொடரா வண்ணம் அழிக்குமே ; 

அண்டும் குடலின் தொற்றுகள் 

 அகற்றி வெளியே தள்ளுமே ; 

நிண்டும் பசியைப் போக்குமே 

 நினைவின் ஆற்றல் தூண்டுமே ; 

உண்டால் நன்மை பயன்தரும் 

 உயர்ந்த அரத்திப் பழமிதாம் ! 

                                                - இராதே

வாழைப்பூ

 வாழைப்பூ (91)



 கண்ணும் புரைநோய்க் காணாதே 

 கருவிழிப் படலம் நையாதே ; 

எண்ணும் மூளைத் துடிப்பாகும் 

 இதயம் இயக்கம் நலமாகும் ; 

பெண்ணின் வாந்தித் தலைசுற்றல் 

 பெருக விடாமல் மறித்துவிடும் ; 

மண்ணில் விளைந்த மருந்தாமே 

 வாழை ஈந்த வாழைப்பூ ! 



 குருதி அழுத்தம் சமப்படுமே 

 குருதிக் கொழுப்பைக் கரைத்திடுமே ; 

குருதி நாளம் செழையுறும் 

 குருதித் தூய்மை சீர்மையுறும் ; 

குருதி இனிப்புக் குறைந்திடுமே 

 குருதிச் சோகைத் தீர்ந்திடுமே ; 

குருதி வளத்தின் நண்பனாய்க் 

 குன்றா துழைக்கும் வாழைப்பூ ! 



 சூலை வயிற்றுப் புண்களைத் 

 தூர விரட்டும் வாழைப்பூ; 

மூலக் கடுப்பை நிறுத்திடுமே 

 மூலப் புண்கள் ஆற்றிடுமே ; 

கால்கை எரிச்சல் அடக்கிடுமே 

 கழிச்சல் முற்றுப் பெற்றிடுமே ; 

சாலச் சிறந்த உணவதான் 

 சான்றே நமக்கு வாழைப்பூ ! 


                                                   - இராதே

சனி, 19 பிப்ரவரி, 2022

பச்சை மிளகாய்

 பச்சை மிளகாய் (90)  




பச்சைப் பச்சை மிளகாய் 

 பயன்கள் மிக்க மிளகாய் ; 

உச்சக் காரங் கொண்ட 

 உணவுப் பொருளே மிளகாய் ; 

அச்ச மூட்டும் புற்றை 

 அழிக்க வல்ல மிளகாய் ; 

எச்ச மாக்கிக் கொழுப்பை 

 எளிதில் கரைக்கும் மிளகாய் ! 

 



குடலைத் தூய்மை செய்யும் 

 குருதி ஓட்டம் பாயும் ; 

உடலின் வெப்பங் கூட்டும் 

 உணவைச் செரிக்க வைக்கும் ; 

உடலில் வியர்வைப் பெருக்கும் 

 உடல்தோல் நோய்கள் மாய்க்கும் ; 

அடங்காத் தொண்டைக் காரல் 

 அடக்கும் பச்சை மிளகாய் ! 

 



துடிக்கும் இதயங் காக்கும் 

 தூண்டுந் தொற்றை ஒழிக்கும் ; 

இடிக்குந் தலைநோய்ப் போக்கும் 

 இனிப்பு நீரைக் குறைக்கும் ; 

முடிகள் உதிர்வைத் தடுக்கும் 

 மூட்டின் வலிகள் நீக்கும் ; 

முடிந்த வரையில் நன்மை 

 முழுக்க தருமாம் மிளகாய் ! 



                                           - இராதே

நறுவல்லிப் பழம்

 நறுவல்லி (89) (மூக்குச்சளி பழம்) 



 நறுவல்லி நறுவல்லிப் பழமே 

 நலம்பல நிறைவாகத் தருமே ; 

சிறுநீரை எளிதாகப் பிரிக்கும் 

 சிறுநீரின் குழல்நோயைத் தடுக்கும் ; 

உறுத்துகிற குடற்புழுக்கள் அழிக்கும் 

 உடலெழும் எடைகூட பெருக்கும் ; 

மறுதலிக்கும் மலத்தினை இளக்கும் 

மருந்தேதான் நறுவல்லிப் பழமாம் ! 



 உடலுக்கும் குளிர்ச்சியை அளிக்கும் 

 உடலதன் சோர்வினை முறிக்கும் ; 

உடல்தோல் சுருக்கங்கள் நீக்கும் 

 உடல்படு தொழுநோயைப் போக்கும் ; 

உடல்தோலில் மினுமினுப்புத் தோன்றும் 

உடலெழில் இளமையைக் கூட்டும் ; 

குடலுறும் நோய்களைத் தீர்க்கும் 

குணங்கொண்ட நறுவல்லிப் பழமே ! 



 தொண்டைநோய் ,குரல்கம்மல் அடக்கும் 

தொண்டையுறும் வறட்சியும் விலக்கும் ; 

மண்ணீரல் கல்லீரல் வீக்கம் 

 மண்டியிட் டோடோடச் செய்யும் ; 

கண்வலி,வெட்டைநோய்த் துரத்தும் 

 கல்லீரல் நச்சுக்களை விரட்டும் ; 

நன்மைதனைக் கொடையாகப் பொழியும் 

நறுவல்லி மூக்குச்சளிப் பழமே ! 


                                                     - இராதே

பொரி

 பொரி (88) 



நெல்லில் பொரிந்தப் பொரியாம் 

 நேர்த்தி உணவு பொரியாம் ; 

அல்லல் தொற்று நோய்கள் 

அறுக்கும் உணவு பொரியாம் ; 

மெல்ல வீக்கந் தணிக்கும் 

 மேனி எடையைக் குறைக்கும் ; 

தொல்லை மலத்தின் சிக்கல் 

 தொலைத்துக் கட்டும் பொரியாம் ! 


 வயிற்றுப் போக்கு , வாந்தி, 

 வயிற்றில் காற்றின் உழற்சி; 

வயிற்றுப் புண்கள் ,காய்ச்சல், 

 மார டைப்பு , வாதம் 

உயிரை எடுக்கும் பிணிகள் 

 உடலில் வராமல் தடுக்கும் ; 

உயிர்ப்பாய் மூச்சு நோய்கள் 

 ஒழிக்கும் மருந்து பொரியாம் ! 



 முகத்தின் சுருக்கம் , கோடு 

 முகத்தில் கருமை புள்ளி 

முகத்தை விட்டே அகல 

 முழுதாய் உழைக்கும் பொரியாம் ; 

அகத்துள் குருதி அழுத்தம் 

 அடக்கும் உணவு பொரியாம் ; 

தகர்க்குந் தோலின் நோய்கள் 

 சத்து நிறைந்த பொரியே ! 


                                        - இராதே

கசகசா

 கசகசா (87) 



மருத்துவ அரசனாம் கசகசா 

 மலச்சிக்கல் தீர்த்திடுங் கசகசா ; 

கருப்பையின் குழாய்களைச் சரிசெய்யும் 

கருப்பையில் அடர்சளி வெளியாக்கும் ; 

கருவுறுதல் நிகழ்ந்திட துணைநிற்கும் 

கழிச்சலை முற்றிலும் நிறுத்திடும் ; 

கருங்கூந்தல் வளர்ச்சிக்குத் துணைசெய்யும் 

கண்பார்வை மேம்படுத்துங் கசகசா ! 



 மிகைக்குருதிப் போக்கினைத் தடுத்திடும் 

மிகுந்திடுங் கொழுப்பினைக் கரைத்திடும் ; 

தகர்ந்திடும் குடற்புழு, தோலழற்சி 

 தணிந்திடும் இனிப்புநீர் ,வலிகள் ; 

முகப்பருவை மெல்லவே நீக்கிடும் 

 மூளையைச் சிறப்பாக்குங் கசகசா ; 

முகத்தினைப் பொலிவுற மாற்றிடும் 

 மூச்சழற்சிச் சீர்செய்யுங் கசகசா ! 



 குருதியின் அழுத்தத்தைச் சமன்படுத்தும் 

குருதியின் ஓட்டத்தைச் சீர்ப்படுத்தும் ; 

அருமையாய்த் தூக்கத்தை வரவழைக்கும் 

அகலுமே ஊளைச்சதை ,தலைக்கனம் ; 

நெருடிடும் வாய்ப்புண்கள் ,தோல்நோய்கள் 

நெருங்கிடச் செய்யாதே கசகசா ; 

அருவியாய் நன்மைகள் படைத்திடும் 

அருங்கொடை உணவுதான் கசகசா ! 


                                                      - இராதே