குலைகள் சாய்ந்து மண்ணில் வாழை
குனிந்து கவ்வ இடம்பார்க்கும் ;
தலைகள் ஆட்டி நீண்ட தென்னை
தாள மிட்டே அசைந்தாடும் ;
கிளைகள் விரித்த மரத்தின் கைகள்
கீழே ஆற்றில் நனைந்தாடும் ;
மலையின் தென்றல் உள்ளே புகுந்து
மண்ணின் வாசம் பிடித்தோடும் ! ( 1 )
பந்தாய் உருட்டிப் பனங்காய் நுங்கை
மந்திக் கூட்டம் மகிழ்ந்தாடும் ;
சிந்தும் நுங்கை உண்ண வந்த
சின்ன முயல்கள் ஒளிந்தாடும் ;
முந்தி ஓடும் குட்டி அணில்கள்
முட்டி மோதி இரைத்தேடும் ;
அந்திப் பரிதி மேற்கில் கவிழ்ந்து
அகலும் காட்சிக் களித்தாடும் ! ( 2 )
அன்ன நிலவு வருகை பார்த்து
அல்லித் தண்டு வளைந்தாடும் ;
சின்ன வண்டு சுற்றிச் சுற்றித்
தேனை ஊறிஞ்சி நெகிழ்ந்தாடும் ;
என்ன அருமை இயற்கை பொழிவு
எந்தன் நெஞ்சம் குதித்தாடும் ;
கண்ணைப் போல இயற்கை காக்க
கனிந்து மக்கள் வரவேண்டும் ! ( 3 )
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக