இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

உதிர்ந்த பூக்கள்

 உதிர்ந்த பூக்கள் !


உதிரும் உதிரும் பூக்களே ;

உண்மை உதிர்க்கும் பூக்களே !

எதிரும் புதிரும் வினைகளாகி

எடுத்து காட்டும் பூக்களே !   ( உதிரும் )





புதிய வரவு துள்ளுமே ;

பழைய செலவு செல்லுமே ;

விதிகள் கோட்டைத் தாண்டலாம் ;

விடியல் வாழ்வைத் தூண்டலாம் !   ( உதிரும் )




விரிவு நாடும் உறவுகள் ;

விலகச் சொல்லும் பிரிவுகள் ;

விரல்கள் தொடுக்கும் மாலையில்

விரைந்து வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 1



மலரும் வேளை காலைதான் ;

மடிந்து போவாய் மாலைதான் ;

மறந்த மெய்மை உணர்த்தியே

மண்ணில் வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 2



சாய்ந்த பின்னும் சாதிகள்

சடங்குப் பார்க்கும் மனிதர்க்குச்

சரிந்து நிலைமை விளக்கிடும்

சாயுங் காலப் பூக்களே !  ( உதிரும் ) - 3



உயர்த்திப் பிடிக்கும் மதங்களை

உதற மறுக்கும் பிறவிகள்

உந்தன் பாடம் மறந்தனர்

உதிர்ந்து வீழும் பூக்களே !   ( உதிரும் ) - 4


 - பொறிஞர் இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக