இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

 பனி

( காவடிச் சிந்து )
விண்ணூ ரிடம் பிறந்த
மின்னா ரொளி படைத்த
விலைவயி ரக்கொடை
மிகுமகு டத்துறை கற்களே ! - அதை
விடியலு றும்பொழுது
நெடுதலை யேற்றிடும் புற்களே !
பொன்னா மிளிர்த் துளிகள்
கண்ணா மொளித் தொழுகும்
பொழிலுறும் புத்தணி
அழகினை இட்டிடும் முத்திதோ ? - நுகர்
புதுமணம் முந்திடும்
குளிர்தரு வெள்ளரி வித்திதோ ?



வெண்பொன் துகள் பரவல்
கண்முன் படர் சரிகை
விழிஉவ கைப் பெரும்
வரைஉடை நுரைமிகும் போர்வையோ ? - பனி
மெருகிட மென்சிலிர்
குளுகுளு தந்திடும் பார்வையோ ?
மென்பஞ் செனப் பரவும்
வெந்தஞ் சியும் மறையும்
வியனுறு வெண்பனி
நழுவுத லின்புறும் நெஞ்சமே ! - புவி
விழுமிய தென்முனை
வடமுனை மென்பனி மஞ்சமே !


நீரா வியுங் குளிரும்
சீரா கவும் படரும்
நெடுமலை யில் நிகழ்
உறைபனி அண்டிடும் திண்மமாம் ! - அது
நிறைபடு நன் நதி
நிலைபெறும் என்பதும் தொன்மமாம் !
ஆறா வெயில் எரிய
ஆறா கிடும் பனியும்
அலைதலு டன் சில
பரவையும் பன்மடங் குயருமாம் ! - வையம்
அழிபடும் துன்பமும்
துயரமும் மண்டுட அயருமாம் !

- இராதே

பரவை : கடல்
அயர் : வருத்தம்

திங்கள், 14 செப்டம்பர், 2020


                              குருதி

                    ( காவடிச்சிந்து )

செந்தே  னிறமுடைய  நீராம் ! -  உட லோடிடும்

     செந்நீ  ரெனஅணையும்  பேராம் ! -அது

               சிந்திடவீ  ழாமலுடல்

               தன்னுடன்அன்  றாடவலம்

     சென்றிடும்  மாண்பமையும்  சாறாம் ! - தொடர் சுற்றிடும்

     செய்கையின்  னுயிர்வளர்  சீராம் !



சந்தடி  யில்லாமலுடல்  ஊறும் ! -  ஊட்டச் சத்தோடு

     சகலமி  டமும்நிதம்  சேரும் ! - நின்று

               சக்கையுறும்  சேர்கழிவை

               மிக்க அழ  காய்விளையும்

     தக்கவினை  யினால்வெளி  யேறும் ! -  செஞ்சீர் அணுவின்

     சாதனைஇ  தையெடுத்துங்  கூறும் !



நுண்ணிய  அணுவுங்காக்கும்  எல்லை ! -  வரும் நோய்த்தொற்று

     நுண்ணுயி  ரழிக்கும்அணு  வெள்ளை ! - உயர்

               நுட்பமுடன்  தட்டையணு

               வெட்டுடலின்  செங்குருதி

     நொந்தெழச்  செய்வதுவே  இல்லை ! - அணு மூன்றினில்

     நுண்செய  லீர்க்கும்உள்ளங்  கொள்ளை !



உந்துமே  இதயநொடி  தோறும் ! - உயிர்க் காற்றினை

     யுறிஞ்சும்  செங்குருதியும்  சீறும் ! - எலும்

               புள்வளரும்  மஜ்ஜையினி

               லுள்மலரும்  நல்லணுவும்

     உற்றபடி  சுரந்துடம்  பூறும் ! - சுழன் றோடிடும்

     உதிரத்  தில்உரமு  மேறும் !



செய்திடுவோம்  செங்குருதி  ஈகை ! - உயிர் மீட்டிடும்

     செயலிலுங்  கிட்டும்புகழ்  வாகை ! - ஆறு

               திங்களென  ஓர்முறையும்

               தங்கமன  எண்ணமுடன்

     செய்யுங்கொடை  மகிழ்ந்தாடும்  தோகை ! - உயர்ந் தோரிடும்

     செய்கையினால்  மனம்பெறும்  ஓகை !



மெய்யுணர்வை  மீட்டிவிடும்  சுருதி ! - இழப்போ மெனில்

     மேவுமு  யிர் அடைந்திடும்  இறுதி ! - திகழ்

               மெல்லுடலை  நல்லபடி

               செல்லுபடி  யாகும்படி

     மேனிநலங்  காப்பதுதான்  குருதி ! - உயி ராண்டிடும்

     மென்குருதி  காக்கயேற்போம்  உறுதி !


                                                                                                                     - இராதே

ஓகை; உவகை

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

 வினைத் திட்பம்


திண்செய லுற
திடமனங் கொளும்
சீர்வினைத் திட்பம் ! - நிதம்
எண்ணிய செயல்
எண்ணிய படி
எய்திடும் நுட்பம் !

உயர்நிலை யுற
உழைத்திடும் செய
லுறுதியில் ஆண்மை ! - ஆளும்
உயர்கருத் திடை
உளம்புகுந் ததில்
உயர்ந்திடும் மேன்மை !

செய்திடும் செயல்
திறத்தினை வாயும்
செப்புதல் எளிது ! - அதை
செய்திட வாய்
செப்பிய படி
செய்வதோ அரிது !

சிறுவுறு வென
சிலர்மனத் தினை
சிதைப்பது குற்றம் ! - முறை
திருத்தேர் செல
சிறுவச்ச துவே
சிறப்புறு சுற்றம் !

தொடரிடர் நிலை
துயரறும் படி
துடைத்திடல் நன்று ! - கடுந்
தொடரிடர் வரின்
துணிவுடன் அதை
துரத்துவோம் வென்று !

நற்செய லினை
நடத்திடும் வழி
நடப்பதில் உறுதி ! - இதை
விற்கணை யென
விரைவுடன் செய
வெல்லுதல் இறுதி !
- இராதே

 மழையே வாழ்க !

( அமுதே ! தமிழே ! )
மழையே ! மழையே ! அழகிய
மழையே ! பெருமழையே !
மழையே ! மழையே ! அழகிய
மழையே ! பெருமழையே !
மழைதரும் நீர்வளம் பார்!
மழைதரும் நீர்வளம் பார்!
மனதினில் மகிழ்வினில் ஆழ் !
மனதினில் மகிழ்வினில் ஆழ் !
மழையே நாளும் நீ வாழ்க !
மழையே நாளும் நீ வாழ்க ! ( மழை )


வானூறும் நீராரம் ! - வயல்
வெளியின் ஆதாரம் !
வானூறும் நீராரம் ! - வயல்
வெளியின் ஆதாரம் !
வரு மழையே ! பெரு மழையே !
வளமையினைத் தரு மழையே !
வான் மெழுகாய் உருகும் பெருகும்
அதில் உயிர்கள் மகிழ்ந்து போகும் ;
வான் மெழுகாய் உருகும் பெருகும்
அதில் உயிர்கள் மகிழ்ந்து போகும் ;
பூ மயிலும் கொண்டாடும் மழையே
நாளும் நீ வாழ்க ! ( மழை ) ( 1 )


அன்றல்ல இன்றல்ல என்றென்றும்
நீர்வளங்கள் ;
அன்றல்ல இன்றல்ல என்றென்றும்
நீர்வளங்கள் ;
மழை பொழிய நிரம்பி எழும் !
மலை யருவி பெருகி விழும் !
நீர்நிலையும் நிலமும் உழவும்
நீயிருந்தால் மரணமேது !
நீர்நிலையும் நிலமும் உழவும்
நீயிருந்தால் மரணமேது !
பொன்னுலகில் நீர்ப்பாய மழையே
நாளும் நீ வாழ்க ! ( மழை ) ( 2 )


பெய்யாமல் தீங்கிழைக்கும் பெய்திங்கே
நன்மை தரும் !
பெய்யாமல் தீங்கிழைக்கும் பெய்திங்கே
நன்மை தரும் !
நிறைமழையாய்ப் பொழிந்தே எழும் !
குறைமழையாய் ஓய்ந்தே விழும் !
உயிருணவும் உடையும் உயர்வும்
நீயிருந்தால் உலகிலுண்டு !
உயிருணவும் உடையும் உயர்வும்
நீயிருந்தால் உலகிலுண்டு !
மண்ணுலகில் நீர்வாழ மழையே
நாளும் நீ வாழ்க ! ( மழை ) ( 3 )
- இராதே

Like
Comment
Share

 தீ நுண்மி ( கொரோனா )

( காவடிச் சிந்து )

( பவணக்கி ரியதனுள் தானே - மெட்டு )
பரவும்நுண் ணுயிர்ச்செய லாலே ! - மண்ணின்
மேலே ! - படு
பாழும்நோயொடு மேலுந்துன்புற
வாழும்பேருயிர் போகுமென்பதை
பாராய் ! - கூட்டம்
சேராய் !

கரவுப்ப கைமுடிக்கும் நோயே ! - புன்மை
தீயே ! - வழி
காணவேஒரு ஆளுமிங்கிலை
வீணதாய்ப்பொருள் போவதெங்கென
காணோம் ! - ஊமை
யானோம் !

இருமல்ச ளிவருமப் போதே ! - நாள்தள்
ளாதே ! - காய்ச்சல்
ஏற்றமாய்மிக மூளுந்தீங்கினை
மாற்றவேமருந் தோடுவாழ்வதன்
ஈடே ! - சொல்வ
தேடே !
அருகும்நு ரையீரலி னூடே ! - நுண்மி
கூடே ! - புக
ஆட்டமாடிட மூச்சுந்தேய்பட
ஓட்டமேயற மாயுமாமுடல்
ஆவி ! - திணறல்
மேவி !

விலகித்த னித்திருப்ப தாமே ! - நன்மை
யாமே ! - இதை
வீட்டிலேஅரங் கேற்றிப்பார்த்திட
நாட்டிலேதின ஊன்றிமேவிடு
வாயே ! - நிற்கும்
நோயே !

நிலவும்உ யிரிழப்பும் போமோ ? - நம்ப
லாமோ ? - மக்கள்
நேர்த்தியாய்நெறி மீறிடாதுடன்
தீர்வுநோக்கிடல் கானல்போலுள
நீரோ ? - வெல்லு
வாரோ ?

திடமற்றஎ திர்ச்சத்தில் லாதே ! - உடல்
மீதே ! - மிக்க
தீரமாயுடன் ஏகியேஉயிர்
சோரவேபிணி கோரத்தாண்டவ
தீதே ! - சாவின்
தூதே !

நடமிடுமு ளத்துணிவி னோடே ! - மாய்ப்போம்
கேடே ! - தொற்று
நாளுமேபர வாமல்செய்திட
ஆளுமையுடன் நோயைவீழ்த்தினி
நாமே ! - மகிழ்
வோமே !

- இராதே

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

 கண்ணதாசன்

(காவடிச்சிந்து)


தேட லேபணியென் றாடத் தொழுந்தமிழ்
நேசனைக் - கண்ணனவன்
தாசனை - எண்ணத்
திகட்டத் திகட்டப்பாயும்
அகமே வும்புகழ்ஞான வாசனை !


பாட லின்பமிகுந் தோட உருளுந்தே
ரோட்டமே !- சந்தத்தின்பந்
தாட்டமே ! - எழுத
கூடும் மயிலிறகால்
ஓடு மேதமிழ்ப்பகைக் கூட்டமே !


வெள்ளித் திரையினூடே துள்ளித் தி்ரியுமவன்
பாடலே ! - இசைத்தேந்தமிழ்ச்
சூடலே ! - மாந்தம்
வெல்லுந் தத்துவங்கள்
சொல்லும் வையகத்தின் சாடலே !


அள்ளச் சுரப்பினுள்ளே மெல்லப் பெருகுங்கவித்
தேறலே ! - அறிவினுயர்ச்
சீறலே ! - சொற்கள்
மேவும் பண்முகிலால்
தூவும் செம்மொழியின் தூறலே !


கம்பன் கவிநயத்தில் தெம்பி லுளந்திளைத்
சிந்தையே ! - அருந்தமிழின்
சந்தையே ! - சித்தர்
காவி யம்பலகற்றுப்
பாவில் கொடுத்ததுன்றன் விந்தையே !


வம்பாம் அரசியலில் எம்பிக் குதித்தெழுந்த
தீரரே ! - அதிர்ந்தொலிர்ந்த
சூரரே ! - தமிழ்
வாழ வேஉயிரென்று
வேழ மாய்மொழிகாத்த வீரரே !


மங்கை மார்கள்மதுரங்கள் பட்டறிவுச்
சொல்லியே - வீசுங்கருத்து
மல்லியே ! - மன
வாசக் கண்ணனிடம்
பாசத் துடன்படர் வல்லியே !


சந்த யாப்பினிலும்சிந்து யாப்பினிலும்
மன்னனே ! - உயிர்மொழியன்பின்
தென்னனே ! - கன்னித்
தமிழ்ப் பேருலகென்றும்
அமிழ் தாமெனப்போற்றும் பொன்னனே !

- இராதே
Image may contain: 1 person
You, பக்கிரிசாமி தியாகராஜன், Thirumal Govindaraju and 6 others
2 Comments
Like
Comment
Share