இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 23 ஜனவரி, 2015

காரறிவு

கறுத்த  அறிவே  காரறிவு ;
          களவுகள்  ஆளும்  சிற்றறிவு ;
அறுத்துத்  தாலிக்  கொடிபறிக்கும் ;
          அடுத்தோர்  வாழ்வில்  குழிப்பறிக்கும் ;
உறுத்தல்  இன்றி  ஊறுசெய்யும் ;
          உழைப்பை  விடுத்துத் திருடச்செய்யும் ;
சிறுத்த  பண்பின்  வெளிப்பாடே
         சிந்தை  யில்லாக்  காரறிவு !


காற்றில்  ஒளிரும்  அலைக்கற்றை
          கரவில் ஊழல்  பலபுரிந்தவர்,
ஆற்று  மணலைக்  கனிமத்தை
          அகழ்ந்து  திருடி  மகிழ்தலென
சேற்றை  வாரி  இறைக்கின்ற
          செயலாம்  இந்தக்  காரறிவு ;
ஊற்றாய்ப்  பெருகும்  காரறிவால்
          உழலும் ஊழல்  ஒழிப்பீரே !


அடுத்தோர்  பொருளை  உள்ளத்தால்
          அடைய  நினைத்தல்  காரறிவு ;
எடுக்கும்  வாய்ப்புக்  கிடைத்திடினும்
          எடுக்கா  திருத்தல்  பேரறிவாம் ;
கொடுத்த  பொறுப்பில்  திருடாமல்
          கொள்கைக்  குன்றாய்  வாழுதலே
எடுத்துக்  காட்டாய்  நின்றுவிடும் ;
          இயங்கும்  உலகை  வென்றுவிடும் !


பறித்து  வாழும்  செயலினையே
          பழக்க  மாக்கும்  காரறிவு ;
குறித்த  வாழ்க்கை  வாழ்பவரின்
          குணத்தில்  இல்லை  காரறிவு ;
அறிந்த ஐயன் வள்ளுவனார்
          அறைந்தார்  குறளில் இச்செய்தி
பொறிப்பீர்  கருத்தை  நெஞ்சினிலே
          புவியில்  திருட்டை  ஒழிப்பீரே !
                                                                           - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக