இராதே

இராதே
eradevadassou

வியாழன், 14 நவம்பர், 2013

சிலந்தி

உண்ணும்  வாயில்  உமிழின்  ஊற்றை
          ஊதி  ஊதி  இழையாய்  மாற்றி
கண்ணுங்  கருத்தும்  ஒன்றாய்க்  கூட்டிக்
          கலையின்  நுணுக்கம்  மெத்தக்  காட்டிப்
பின்னும்  வலையில்  இரைகள்  சிக்க
          பிடித்துக்  கொன்றுப்  பசியைப்  போக்கி
மின்னல்  நடனம்  எட்டுக்  காலில்
          மிதந்தே  ஆடும்  சிலந்திப்  பூச்சி !


குள்ள  சிலந்தி ;  தோட்ட  சிலந்தி ;
          கூடு  கட்டித்  தொங்குஞ்  சிலந்தி ;
முள்ளு  சிலந்தி  நண்டு  சிலந்தி ;
          முட்டி  முட்டித்  தாவும்  சிலந்தி ;
துள்ளி  ஓடும்  ஓநாய்ச்  சிலந்தி ;
          துரத்தும்  நீண்ட  தாடை  சிலந்தி ;
துள்ளும்  நெல்லு  வண்டை  தின்று
          துயரைத்  துடைக்குங்  கணுக்கால்  சிலந்தி !


இயற்கை  தந்த சிலந்தி   யெல்லாம்
          இளமை   யான  பயிரைக்  காக்கும் ;
வியக்கும்  வகையில்  பயிரை  உண்ண
          விரையும்  உயிரை  உண்டு   மாய்க்கும் ;
 செயற்கை  வேதி  மருந்தைத்  தெளித்து
          சிலந்தி  இனத்தைச்  சிதைத்து  விட்டால்
இயற்கைச்  சுழற்சி  என்ன  வாகும் ?
          இணக்க  மின்றி  அருந்து  போகும் !

                                                                                                    இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக