இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 10 நவம்பர், 2013

வேப்ப மரம்

ஒளிரும்  மஞ்சள்  நிறத்திலே
          உதிரும்  வேப்பம்  பழங்களைக்
கிளிகள்  குயில்கள்  உண்டதன்
          கிளையில்  ஊஞ்சல்  ஆடுமே!
தளிரும்  துளிரும்  மருத்துவம்
          தாங்கும்  கொழுந்தை  வழங்கியே
குளிர்ச்சி  யானக்  காற்றினைக்
          குழைத்து  வாரி  வீசுமே!


இலைகள்  பூக்கள்  காய்கனி
          இறுகும்  பட்டை  வேர்களும்
விலையி  லாத  மருந்ததாய்
          வீட்டின்  நலத்தைக்  காக்குமே !
பலகை  சட்டம்  சன்னலாய்ப்
          பதிக்கும்  வாரைக்  கூரையாய்
பலதும்  தந்து  பயனுள
          பண்பு  நிறைந்த  வேம்பிதே !


சூம்பிக்  குன்றித்  தன்னலம்
          சூழ  நின்று  வெட்டியாய்க்
காம்பி  லாத மலரைப்போல்
          காத  றுந்த  ஊசிபோல்
ஓம்பும்  வெற்று  வாழ்வினை
          உதறித்  தள்ளி  விருப்புடன்
வேம்பின்  உயர்ந்த  குணத்துடன்
          விரைந்தே  உதவ  வாருங்கள் !
                                                                               -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக