இராதே

இராதே
eradevadassou

வியாழன், 28 நவம்பர், 2013

மரங்கொத்தி

     கறுப்பு  வெள்ளை  நிறத்திலே
          கடமை  வீர  னாகவே
     சுறுசு  றுப்பின்  வடிவமாய்
          துளைக்கும்  மரத்தை  மரங்கொத்தி ;
     இறுக்கும்  விரலால்  மரத்தினை
          இறுக்கிப்  பற்றிக்  கொள்ளுமே ;
     நறுக்கும்  அலகால்  கொத்துமே ;
          நழுவும்  புழுவை  உண்ணுமே !



     மரத்தில்  கூடு  கட்டிட
          மரத்தைக்  குடையும்  மரங்கொத்தி
     மரத்தின்  கூட்டில்  இருவழி
          வைக்கும்  மதியின்  நுட்பத்தால்
     முரட்டுப்  பகைவர்  கூட்டினுள்
          முன்னம்  வழியில்  நுழைந்திட
     வரவை  யறிந்த  மரங்கொத்தி
          மாற்று  வழி யில்  பறந்திடும் !


     நீள  மான  நாக்கினை
          நீட்டும்  இரையின்  புற்றினுள்
     நீள  நாக்கின்  பசையிலே
          நெளியும்  இரைகள்  சிக்குமே ;
     சாலச்  சுவைத்தே  உண்டிடும் ;
          சாது  போல  நின்றிடும் ;
     ஞாலங்  கண்ட  இயற்கையின்
          நளின  பறவை  மரங்கொத்தி !
                                                                             -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக