இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அலைகடல்





                    எடுப்பு
அலைக டலாடிட வேண்டும் - வெள்
          ளலையொ டெங்கணு மாயினும் நீந்தியே               ( அலை )

                    தொடுப்பு

அலையின்வ ளைவில்நெளி வில்மகிழ உடனே
          ஆடிடும் பால்நுரை யுடன்நாம் எழவே                       ( அலை )

                     முடிப்பு

நீரில்ந னைந்தவுடன் நெஞ்சம்நெ கிழவுபெறும்
          நேரம திலும்தூர பாதைப்ப யணத்திலும்
வீரரும் முழுகும் நீரரங் குகளிலும்
          வீசல்க ளிலும்மிசை பாய்ச்சல் களிலும்பொங்கும் ( அலை }


                                                                                                          -இராதே

சனி, 22 செப்டம்பர், 2018

குட்டித் தவளை

குட்டிக் குட்டித் தவளை
எட்டி எட்டிப் பார்க்கும் ;
குளத்துத் தண்ணிக் குள்ளே
குட்டிக் கரணம் போடும் ;
சத்தம் போட்டு மழையில்
சரள மாகப் பாடும் ;
கொத்தும் பாம்பின் இரையாய்க்
குரலால் மாட்டிக் கொள்ளும் !
- இராதே

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கார் காலம் ( காவடிச் சிந்து )

விண்ணிருந்  துமண்ணில்  தூவுதே !
                                                  பருவமழை
                                                  பயிர்வளர்செய்
     விந்தை  யுடன்வயல்  மேவுதே  ! - வெல்லும்
                         மின்னொலிமலர்  வண்ணமேசுடர்
                         சொன்னமேயென  முன்னமேவளர்
     மென்விளை  வைஈனும்  மழையே  !
                                                 பெருவிளைச்சல்
                                                 தனைவிளைக்க
     வில்லையெ  னில்பெரும்  பிழையே !




மன்மதன்  கைக்கணை  சரமாம் !
                                                  அதிவிரைவில்
                                                  பரவிவிழ
     மண்வளத்  தைப்பேணும்  வரமாம்  ! - பொங்கி
                         வந்தநீர்நிலை  நின்றுமேலெழ
                         உந்துசேர்வழி  அண்டிசேர்ந்துழ
     வயல்வழி  யநீரின்  வரவே !
                                                  நனையநிலம்
                                                  முளைபயிர்கள்
     வளர்வது  வும்இயற்கை  உறவே  !



தண்ணீரோ  டவாய்க்கால்  காணுதே !
                                                 வழிநெடுக்க
                                                 தனைமறைத்தும்
     தங்குமி  டம்நாடி  பூணுதே  ! - தூர்ந்த
                         தன்நிலைவழி  மண்ணெடுத்திட
                         சென்றுசேர்கையில்  உண்டநீர்நிலை
     தன்னிறை  வில்பாடல்  பாடுதே !
                                                 அலையெழும்பிக்
                                                 கரைபுரள
     'தந்தனத்  தோம்'தாளம்  போடுதே  !



புன்னகையாய்  வெள்ளம்  பாயுதே  !
                                                  மனமகிழ்வில்
                                                  தினநெகிழ
     பூரிப்பி  லேஉள்ளம்  சாயுதே  ! - வந்த
                         பெண்ணிணைகுயில்  வண்ணமாமயில்
                         மண்ணிலேவிழும்  சின்னப்பூவிதழ்
     பூப்படைந்  தேநெஞ்சம்  மீட்டுதே  !
                                                  மழைப்பருவம்
                                                 மயங்கித்தொழப்
     புத்துணர்  வில்இன்பங்  கூட்டுதே  !


                                                                       - இராதே




                                                  

வியாழன், 20 செப்டம்பர், 2018

சாலை விதிகள் ( காவடிச் சிந்து )


சாலைத் தெருக்களில் நள்ளியே - நல்ல
          சட்டம் மதியாமல் எள்ளியே - சீறும்
          சாலச் சறுக்களில் துள்ளியே - வண்டித்
                    தடுமாறிட அடங்காமலே
                    நடுவீதியில் இடந்தாவியே
          சட்டென இடிபடத் தள்ளியே - மக்கள்
          சாவவே வைக்கிறாய்க் கொள்ளியே !

மாலை மயக்கத்தை நீட்டியே - மது
          மதியதன் பேச்சினைக் கேட்டியே - மன
          மகிழ்வினில் முடுக்கங்கள் கூட்டியே -விதி
                    மதிப்போரையும் நடப்போரையும்
                    மதிமாறியே தடம்மாறிட
          மரணத்தின் ஓலையைத் தீட்டியே - மாந்தன்
          மண்டையைப் பிளக்கிறாய் ஓட்டியே !

தொங்கியே பேரூந்தில் செல்லாதே - படி
          தொற்றிக் கொண்டுநீ நில்லாதே - பெருந்
          துன்பத்தை நொடியினில் புல்லாதே - சாலை
                    விதிமீறியே தடுமாறிட
                    சதிவேலையில் கொடுமையுறு
          தொல்லைகள் தரும்வழி கல்லாதே - வாழ்வின்
          தொடக்கத்தில் இன்பங்கள் கொல்லாதே !

பாங்குடன் வாழ்வதே சுகவாசி - தெரு
          பயணத்தில் ஏன்தானோ செல்பேசி - சவ
          பாடையை நாடவா அலைபேசி - நாளும்
                    பலர்கூடிடும் தெருகூடலில்
                    நிலைமீறிடும் விழிமூடியப்
          பயணங்கள் மாய்த்திடும் அதைவாசி - இதன்
          பக்குவம் அறிந்திட நீயோசி !

                                                                       - இராதே

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பார் ! பார் ! நல்லா பார் !




கூடு கட்டும் குருவி பார் !
     கூடி வாழும் காகம் பார் !
ஆடு கின்ற மயிலைப் பார் !
     அழகாம் அணிலின் ஓட்டம் பார் !
பேடு கொஞ்சும் குயில்கள் பார் !
     பேசு கின்ற கிளிகள் பார் !
தேடு கின்ற கண்கள் பார் !
     தெரியும் இயற்கைக் காட்சி பார் !

வலையைப் பின்னும் சிலந்தி பார் !
     வாலைக் குழைக்கும் நாயைப் பார் !
தலையை ஆட்டும் ஓணான் பார் !
     தாவி ஆடும் குரங்கைப் பார் !
அலையுங் கொடியில் அரணை பார் !
     அமைதி காக்கும் கொக்கு பார் !
நிலையி லாத உலகைப் பார் !
     நீளும் இயற்கைக் காட்சி பார் !

ஆட்டம் போடும் அருவி பார் !
     அலைந்து திரியும் ஆற்றைப் பார் !
கூட்டம் கூடும் மீன்கள் பார் !
     கொத்திக் கவ்வும் கழுகு பார் !
நோட்டம் பார்க்கும் கருடன் பார் !
     நுங்கு தொங்கும் பனையைப் பார் !
காட்டும் புவியின் எழிலைப் பார் !
     களித்துச் சுவைத்து நல்லா பார் !

                                                                -இராதே

தாய்மொழிக் கல்வி - காவடிச் சிந்து

ஆங்கில மேமொழி ஆளுமை யாமென
          ஆவலில் சிக்குவ தோ ? - செந்தேன்
     அன்னைத்த மிழ்மொழி தன்னைய றியாமல்
          அச்சத்தில் விக்குவ தோ ?

ஓங்கிய வாணிகம் மேம்படும் மாமொழி
          ஊடாக வீண்பேச் சு ! - தமிழ்
     ஒட்டார மாகவே விட்டுப்ப டிக்காத
          ஊக்கம்எங் கேபோச் சு !

தாய்மொழிக் கல்வியைத் தள்ளுகி றாய்நனி
          தப்பெனத் தோணலை யோ ? - மொழி
     தண்டமிழ் நாட்டிலே தன்னுணர் வில்லாமல்
          சாலவே பேணலை யோ ?

வாய்மொழி ஆங்கிலம் மாபெரும் தேனென
          மண்ணதி லெண்ணுவ தேன் ? - வளம்
     மண்டிய தாய்மொழிக் கல்வியைக் கற்காமல்
          மாயத்தில் மின்னுவ தேன் ?

சர்க்கரைக் கட்டியாம் தண்டமிழ்ச் செம்மொழி
          தாய்த்தமிழ் எள்ளுவ தோ ? - மொழி
     சந்தையில் சிந்திடும் ஆங்கில வன்மொழி
          தாளத்தில் துள்ளுவ தோ ?

அக்கரைக் காரர்கள் ஆண்டதே அம்மொழி
          அத்தோடே போயாச் சே ! - அதை
     அப்படி யேநாளும் ஆறத்த ழுவுதல்
          ஆணவப் பேய்மூச் சே !

நம்புவி மேலுறும் நற்றமிழ் மீதினில்
          நம்பிக்கை ஏனிலை யோ ? - ஆண்ட
     நம்மவர் தென்மொழி நாளுமே வாழ்ந்திட
          நற்செயல் தானிலை யோ !

அம்புவி மேவிடும் அன்பரே நண்பரே
          ஆதித்த மிழ்மீட் போம் ! - மாளும்
     அன்னைத்த மிழ்ஆள எல்லோரும் ஒன்றாகி
          ஆண்டத்த மிழ்க்காப் போம் !


                                                                         - இராதே

நத்தை ! வித்தை ! தத்தை !


நத்தை நத்தை நத்தை
     நகர்ந்தே ஊறும் பூச்சி நத்தை !
மெத்தை மெத்தை மெத்தை
     மேனி மெல்ல தாங்கும் மெத்தை !
சொத்தை சொத்தை சொத்தை
     சொல்லும் பல்லைத் துளைக்கும் சொத்தை !
பத்தை பத்தை பத்தை
    பழத்தை அறிந்து பிரித்தால் பத்தை !


வித்தை வித்தை வித்தை
    விரும்பும் கலைகள் கற்றல் வித்தை !
அத்தை அத்தை அத்தை
    அம்மான் மனைவி அவளே அத்தை !
கத்தை கத்தை கத்தை
    கட்டுக் கட்டாய் பணமோ கத்தை !
ஒத்தை ஒத்தை ஒத்தை
    ஒன்றே ஒன்றாய் இருத்தல் ஒத்தை !


செத்தை செத்தை செத்தை
    சேரும் குப்பைக் கூளஞ் செத்தை !
மொத்தை மொத்தை மொத்தை
    மொழுகும் தூவல் முள்ளால் மொத்தை !
பொத்தை பொத்தை பொத்தை
    பூசணிப் போல உடம்பே பொத்தை !
தத்தை தத்தை தத்தை
    தாவித் திரியும் கிளியே தத்தை !

                                                                   - இராதே