இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

அந்தி

 அந்தி


பொந்திலிருந்து
பாய்ந்து வந்து
வெற்று அலகோடு
பொந்து திரும்பும்
மீன்கொத்தி
மகிழ்வில் துள்ளும்
மீன்கள்

தோன்றி மறையும்
ஓட்டைகளில்
பாசி அடர்ந்த
குளம்

படித்துறையை
முத்தமிட்டு முத்தமிட்டு
எச்சைப் படுத்தும்
சிற்றலைகள்

நா நீட்டிப்
பூச்சிப் பிடிக்க
ஆடுங்கொடித் தாவும்
ஓணானின்
கதகளி

எங்கோ ஓசை கிளப்பி
அமைதியை
தொடர்இடைவெளியில்
சிறுக சிறுக குலைக்கும்
மரங்கொத்தி

மஞ்சள் ஒளி பரப்பி
இடம் நழுவும்
கதிரவன்

அந்தி பொழுதில்
கொன்று தின்னும்
கவலைகளிலிருந்து
மெல்ல மீள்கிறேன்
திரும்ப நடக்கிறேன்
தூரத்தில் வீடு

                  - இராதே


நேரம்

 நேரம்


தாள் முழுதும்
எழுத்து தூறல்
சேர்ந்தும் இடமறிந்தும்
வழிந்து ஓடின

உள்ளத்து மழையின்
தோன்றலோ?
உரசும் சிந்தனைச்
சாரலோ?

மெல்ல மெல்ல
பெய்கையில்
பொருளற்றுப் படர்ந்த
புல்வெளியாய்க்
கவிதை

நுனிப்புல் மேய்கையில்
எதை எடுக்க?
எதை விடுக்க?
சலனமற்று கரைகிறது
நேரம் !
                - இராதே

கசப்பு

 கசப்பு


கரைத்தலிலும்
கரைதலிலும்
இருத்தலை வீசுகிறது
சந்தனம்

மறைத்தலிலும்
மறைதலிலும்
பொய்மையைப் பேசுகிறது
மெய்மை

உறுத்தலிலும்
உறுதலிலும்
வலியைக் கடக்கிறது
மேனி

நிறைத்தலிலும்
நிறைதலிலும்
நிலையாமை அறிகிறது
மனது

உணர்த்தலிலும்
உணர்தலிலும்
கசப்பைப் புகட்டுகிறது
வாழ்க்கை

                    - இராதே

மூச்சு

 மூச்சு



தள்ளாடித் தள்ளாடி
முன் விரிகிற
வாழ்க்கை

ஊர்ந்து நெளிகிற
உண்மைகள் பின்னால்
விழிபிதுங்கி
வழித்தொலைத்து நிற்கும்
கனவுகள்

அன்றிலிருந்து இன்றுவரை
வளைய வளைய
தேய்ந்து தேய்ந்து இளைக்கும்
நினைவுகள்

ஒவ்வொரு புரிதலுக்குள்
முளைவிடும் பட்டறிவு
பயனுறும் முன்
அடங்குகிறது மூச்சு !

                  - இராதே

துளிப்பா 2

 8) Retirement dreams

always another

leaf to fall

 -  Paul David Mena


பணிநிறைவு கனாக்கள்

எப்போது மற்றொரு

இலை விழும்

           -  இராதே


9) Intertidal zone

     no time

     for calm seas

      - Paul David Mena


     'அலைகற்றை மண்டலம்'

     அமைதியான கடல்களுக்கு

      நேரமில்லை

         - இராதே


10) Winter moon

       a crow's

       meditation

            - Paul David Mena


     குளிர்கால நிலவு

     ஒரு காகத்தின்

     தியானம்

         - இராதே


11) Day of the Dead

       she wears

       a strong perfume

          - Paul David Mena


       இறப்பின் நாள்

       அவள் பூசியிருக்கிறாள்

       கமகமக்கும் நறுமணம் 

            - இராதே

பயில்நடை


 காணெழில் கடற்கரை

   கவினுறு ஞாயிறு ;

வானெழில் வண்ணங்கள்

   வளமிகும்  மிகையலை ;

தானெழில் நடையுடை

   சந்தமிடு நண்டுகள் ;

ஊனெழில் உரம்பெற 

     உழன்றிடும் பயில்நடை !

                                     - இராதே

கடலின் ஓரம்


 சென்றேன்நான் அலைதவழுங் கடலின் ஓரம் ;

   சிந்துகின்ற நிலவொளியில் நனைந்தேன் ஈரம் ;


நின்றேன்நான் கடற்கரையில் சிறிது நேரம் ;

    நினைவலைகள் எனையிழுத்தது காதா தூரம் ;


அன்றொருநாள் மணல்வீட்டை உடைத்த வீரம் ;

    அழகான சிறுபிள்ளைத் தனத்தின் தீரம் ;


கன்றெனநான் அருந்தியபால் தமிழின் சாரம் ;

    கனிதமிழாள் கைப்பிடித்தே இட்டாள் ஆரம் !


நண்டோட நான்துரத்த வலையில் செல்லும்

   நண்டொளிந்தே ஆடுகிற ஆட்டம்  வெல்லும்


கண்டோர்தாம் கைக்கொட்டி நகைப்பார் மெல்ல

    கரையொதுங்கும் சங்கினிசை  செவியில் சொல்ல


கொண்டாட்டம் மனத்தெழும்பும் உணர்வில் துள்ளும்

    கோலமிகு நுரையெழிலுங் கொள்ளை கொள்ளும்


திண்டாடுந் திரைத்ததும்ப நெஞ்சம் விள்ளும் 

   திகைப்பான அருங்காட்சி  மனத்தை அள்ளும் !


                           - இராதே