இராதே

இராதே
eradevadassou

சனி, 28 நவம்பர், 2026

எலி திருமணம்


 எலி திருமணம்


எலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்

   எங்கும் கொண்டாட்ட விளம்பரமாம் ;

புலியார் தலைமையில் வரவேற்பாம்

   புள்ளி மான்கூட்டம் முன்னிலையாம் ;



தெளிக்கத் தூறலாய்ப் பன்னீரைத்

   தும்பி தூக்கிடும் யானைகளாம் ;

துளிர்கள் சிரிக்கும் பூக்களைத்

   தூவும் தும்பிகள் மலர்ப்பணியாம் ;



குளித்தே ஒட்டகச் சிவிங்கியார்

   குனிந்தே சந்தனம் கொடுக்கின்றார் ;

கிளிகள் சுமந்தன கற்கண்டு

   குயிலும் இசைத்தன பாக்கொண்டு ;



வரிகள் அணிந்த குதிரைகளோ

   வருகை கும்பிடு போட்டனவாம் ;

நரிகள் தந்தன நகைநட்டு

   நடன மாடின நண்டுகளாம் ;



குறுக்கும் மறுக்குமே முயற்கூட்டம்

   குந்த பாய்கள் விரித்தனவாம் ;

செறுக்கில் முறுக்கியே கரடியார்

   செம்மை தேனுடன் உட்புகுந்தார் ;



எறும்பின் மொய்யதே சர்க்கரையாம்

   எடுப்புப் பணிகளில் அணில்களாம் ;

இறுக்கும் உடும்புகள் காவலராம்

   எரியும் மின்மினி விளக்குகளாம் ;



பாம்பும் சேர்ந்தது பாட்டிசைக்க

   பாயும் தவளையர் தாளமிட

ஓம்பும் ஓணான் ஒத்தூத

   ஓடும் அரணையோ ஆட்டமிட


அமளித் துமிளியில் திருமணமே

   அமர்க் களப்பட்டு மகிழ்ந்தாட

அமைதி யாகவே நோட்டமிட்டே

   அருகே மெதுவாக நடைநடந்தே



அழையா விருந்தினர் பூனையரோ

   அரங்கில் நுழைந்தே தலைகாட்ட

நுழைவைக் கண்டதும் எலிகூட்டம்

   நொடியி லோடியே மறைந்தனவாம் !


   - பொறிஞர் இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக