இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

உண்மை

 'நீ தான் மணல்'

அறைந்தும் சொல்கிறது


அடித்தும் சொல்கிறது

பாறையை

அலைகள்

உணர்த்தலிலும்

உணர்தலிலும்

ஒளிர்ந்து சிரிக்கிறது

உண்மை 


        - இராதே

பிரிவு



இழந்த துணைக்காய்

ஏங்கி இடந்தேடி

அலைகளின் விளையாட்டில்

திக்குமுக்காடி

கரைக்கும் கடலுக்குமாய்க்

கடலாடிக் கசந்துபோய்க்

கரையில் தனித்து

யாருமற்றுக் காட்சிபடுகிறது

ஒற்றைச் செருப்பு

யாரறிவரோ தொலைந்த

துணையின் முகவரி ?


இயற்கை பொழிவு


 முன்மொழிவு

   கம்பளிப்பூச்சிகள்

வழிமொழிவு

  பட்டாம்பூச்சிகள்

கொதிநீரால் கூடுகளகன்று

நூல்கொடுக்க உயிர்மொழியும்

 பட்டுப்பூச்சிகள்

முனகல்களில் உடலருவும்

பட்டாடைகளின் மினுக்கலில்

ஈரம் கசியா

இயற்கை பொழிவுகள் !

                - இராதே

திங்கள், 18 செப்டம்பர், 2023

சிதம்பரநாதம்




நட்பெனும் சிதம்பர நாதம் !


நட்பெனும் சிதம்பர நாதம் ! - அதன்

   நற்றமிழ் ஓதிடும் தத்துவ வேதம் !

சட்டென இசைத்திடும் கீதம் ! - நேய

   சாரத்தை வகுத்திட நடந்திடும் பாதம் !


தித்திக்குந் தேன்சுவை பேச்சு ! - அதில்

   தீந்தமிழ் சிறப்புற எழுந்திடும் மூச்சு !

எத்திக்கும் முழவிடும் வீச்சு ! - நமை 

   இயல்பிலே களிப்புற மயக்கிட லாச்சு !


அன்பிலே திளைத்திட செய்வான் ! - அவன்

   ஆர்த்திடுந் தமிழாலே உள்ளத்தில் உய்வான் !

பண்பாலே நட்பினைக் கொய்வான் ! - ஆழப்

   படித்ததைப் பாரினில் பயனுற பெய்வான் !


இன்பன் சிதம்பரம் வாழ்க ! - நங்கை 

   இணையோடே என்றென்றும் இன்பமே சூழ்க !

நன்றாய் மகிழ்வினில் மூழ்க ! -  நாளும்

   நன்மைகள் பெற்றேநீ நலங்களில் ஆழ்க !

             - பொறிஞர் இராதே

புரிதல்


 தள்ளாடித் தள்ளாடி

முன் விரிகிற

வாழ்க்கை


ஊர்ந்து நெளிகிற

உண்மைகள் பின்னால்

விழிபிதுங்கி

வழித்தொலைத்து நிற்கும்

கனவுகள்


அன்றிலிருந்து இன்றுவரை

வளைய வளைய

தேய்ந்து தேய்ந்து இளைக்கும்

நினைவுகள்


ஒவ்வொரு புரிதலுக்குள்

முளைவிடும் பட்டறிவு

பயனுறும் முன்

அடங்குகிறது மூச்சு !


                  - இராதே

சனி, 28 ஜனவரி, 2023

தமிழா ! தமிழா !

 தமிழா ! தமிழா !


தமிழா ! தமிழா ! இனி உன்  பொறுமை

மிகுந்தால் மொழியும் அழியும் !

அழியும் விளிம்பில் நெளியும் மொழியை இனி

உன் விழிப்பே தடுக்கும் !

மொழியின் தினவே பெருகும் பெருகும்

அடிமை தளையை உடைக்கும் !         (தமிழா)


மொழி தீமைகள் மீறுதடா ! இய லாமைகள்

ஊறுதடா !

மசியாத் தமிழுமே அசையா தென்பது

வாடிக்கையானதடா !

பிற திணிப்புகள் என்பதும் விரிப்புகள் என்பதும் 

வேடிக்கையானதடா !

கடுஞ் சாடல்களே இனி முடிவுகள் என்பது

சூட்டிகையானதடா !

                                                (தமிழா)


புகழ் சூடிய செந்தமிழே ! திகழ் கண்டங்கள்

வென்றவளே !

பெருந் தோல்வியிலா நல் வேள்விகளால்

திறம் மேவிய பொற்றமிழே !

பகை ஆயிரம் ஆயிரம் கூடியே நின்றினும்

நற்றமிழ் வென்று விடும் !

அட ! நாளுமே நம்மொழி நாளைய உலகினைக்

கைக்குளே கொண்டு விடும் !

                        (தமிழா)


                     -  இராதே

திங்கள், 28 நவம்பர், 2022

வெண்பா

 கண்ணின் கருவிழி காமன் பகடையாம்

பெண்டீர் உருட்ட பெருகிடும் - திண்காதல்

பன்னீர் மழையும் பகிருமே இல்வாழ்வில்

இன்பம்  விளையும் இனி


   


சுடரும் விழியால் சுடுவாள் சுவையாய்த்

தொடரும் மொழியால் தொடுவாள் - படரும்

கொடிஇடைப் பாமகளே கொல்லும்நின் பார்வை

அடியால் அளந்தே  னடி 

                                


சிமிட்டா விழிக்குள் சிக்கித் தவிக்க

நிமிட்டும் மனமோ நினைக்க - உமிழ்நீர்

சுரக்கச் சுரக்கச் சுவைபடு காதல்

அரங்கம் பயில அழை


                                     


என்னவளே ! வண்ணயெழில் ஏந்திழையாய் ! வாய்மலர்ந்தே

புன்னகையைப் பூக்கும் புதுமலரே !  - கண்ணெதிரே

கண்கவரும் ஒவியமாய்க் காட்சியொளிர் அன்பனெனை

இன்பமுடன் சேர்வாய் இனி-

 இராதே