இராதே

இராதே
eradevadassou

திங்கள், 30 நவம்பர், 2015

கோனேரி இராமசாமி கும்மி

           

கும்மிய  டிபெண்கள்  கும்மியடி - எழிற்
கொங்கை  குழைந்தாடக்  கும்மியடி

நண்பன்  ராமசாமி  நற்கவி  வாணனை
நாடிக்  கும்மிய   டியுங்கடி - புகழ்ப்
பாடிக்  கும்மிய   டியுங்கடி                                   (கும்மி )

நற்றமிழ்ப்   பாடிடும்   சித்த  னடி - உயிர்
நாதமொ  ளிர்கலைப்   பித்த  னடி
உற்றவர்   நட்புடைக்   கர்த்த  னடி- உள
உறவை   மதிக்கின்ற   சுத்த  னடி                          (கும்மி )  

ஆனந்தத்   தாண்டவக்   கூத்த  னடி - நமை
அன்பி   லசைத்தாடும்   நர்த்த  னடி
கோனரிக்   குப்பத்து   மக்கள்   மகிழ் - நனிக்
கோலன   டிகுண   வாள  னடி                                (கும்மி )  

பண்புடன்   பாடல்செய்   ஐய  னடி - நண்பர்
பாச   மிகஒளிர்    மெய்ய  னடி
கண்ணிய   மிக்கக்   கலைஞ  னடி - உளக்
கள்வன  டிஉயர்    செல்வ  னடி                                (கும்மி )

மக்கள்   கலைகளின்   நேய  னடி - கலை
மக்கள்   போற்றுமுயர்   தூய  னடி  
சொக்கத்    தமிழோது   வாய னடி - வெல்லும்
சொல்லன   டிப்புகழ்   மாய  னடி                              (கும்மி )
                                                                                                                  -இராதே                                            

செவ்வாய், 10 நவம்பர், 2015

கலசம் (புஸ்வானம்)

வண்ண வண்ணத் தீப்பொறி ;
வானம் நோக்கிப் பீச்சுதே ;
சின்னஞ் சிறிய சட்டியில்
சீறும் நெருப்பைப் பீச்சுதே ;
கண்ணைக் கவரும் வகையிலே
கந்த கப்பூ தூவுதே ;
என்ன நெருப்பு மழையிதோ
எரிம லையாய்க் கக்ககுதே ! - இராதே

சங்குச் சக்கரம்

தரையில் சுற்றும் சக்கரம் ;
சங்கு வடிவ சக்கரம் ;
விரைந்து வலமும் இடமுமாய்
விட்டு விட்டுச் சுற்றுதே ;
மரைக ழன்ற சகடம்போல்
மாறி மீறிச் சுழலுதே ;
துரத்தி நெருப்பைக் கக்குதே ;
துள்ளும் சங்கு சக்கரம் !- இராதே

மத்தாப்பூ

கந்த  கத்தூள்  மருந்திலே
கம்பி  நுழைத்த  மத்தாப்பூ;
விந்தை  யாக  சுழற்றலாம்;
வீசி  அசைத்து  மகிழலாம்;
சிந்தும்  சிறிய  பூக்களாய்ச்
சிதறும்  நெருப்பத்  துகள்களே;
வந்து  நின்றே  சுற்றுங்கள்
வண்ணம்  உதிரும்  மத்தாப்பூ! - இராதே

சாட்டை

சின்னச்  சின்னத்  தீச்சரம் ;
சிந்து  கின்ற  தீத்துளி;
என்ன  என்ன  வியப்பிதோ ?
எரிந்தே  ஏறும்  நெருப்பைப் பார் !
கண்கள்  ஈர்க்கும்  நிறங்களாய்க்
கக்குந்  தீயின்  பொரிகள் பார் !
மின்னல்  போலத்  தெரிப்புகள் ;
மின்னி  நெளியுஞ்  சாட்டைபார் !-இராதே

புதன், 26 ஆகஸ்ட், 2015

அன்னை தெரசா பிள்ளைத் தமிழ் - தால் பருவம்

புல்லின்  நுனியில்  பனிசிரிக்கும்;
          பூவி  னிதழில்  தேன்சிரிக்கும்;
     புரளும்  அலையில்  நுரைசிரிக்கும்;
          புதுநீர்  வரவில்  மீன்சிரிக்கும் !


நெல்லின்  விளைவில்  நிலஞ்சிரிக்கும்;
          நீரின்  மிகையால்  நதிசிரிக்கும்;
     நீளும்  இரவில்  இருள்சிரிக்கும்;
          நிலவின்  உலாவில்  ஒளிச்சிரிக்கும் !


வெள்ளு  டையம்மை  குமின்சிரிப்பில்
          விளைவில்  வறியோர்  வாழ்வுயரும்
     வெற்றிச்  செல்வி  சிரிப்பழகி
          வியனு  லகாளும்  கோமகளே !


எல்லை  இல்லாப்  புன்சிரிப்பே !
          எழிலே ! தாலே தாலேலோ
     இன்பந் ததும்பும் தெரசாவே !
          இமையே ! தாலே தாலேலோ
                                                                               -இராதே

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

எனக்குப் புரியல ! - உருப்படி,

                                                  எடுப்பு

                    எனக்குப்   புரியல  -  இங்கு
                    எதுவும்   சரியில !                                                     (எனக்கு)


                                                  தொடுப்பு

                    உண்மை   உரசி   பார்த்துப்   பழகி
                    உயிரைக்   கொடுத்து   காக்கும்   நட்பு              (எனக்கு)


                                                  முடிப்பு

                    கணக்குப்   போட்டுப்   பழகுறான்
                    கவிழ்க்கக்   காயை   நகர்த்துறான்
                    கதையை   முடித்துப்   போகும்போது
                    கழுத்தை   அறுத்தே   கொல்லுறான் !              (எனக்கு)


                    சிரிச்சிச்   சிரிச்சிப்   பழகுறான்
                    சிரிப்பில்   ஆழ்த்தி   மயக்குறான்
                    சிரிச்சி   முடித்துப்   பார்க்கும்போது
                    திருடிக்   கம்பி   நீட்டுறான் !                                 (எனக்கு)


                    அன்பை   யூட்டிப்   பழகுறான்
                    அணைப்பில்   பாசங்   காட்டுறான்
                    அடையும்   நோக்கம்   முடிந்தபின்னே
                    அமுக்கி   மூச்சை   நிறுத்துறான் !                     (எனக்கு)


                    நட்பை   நாடி   பழகுறான்
                    நாமம்   குழைத்துப்   போடுறான்
                    நஞ்சை   வாயில்   ஊற்றிப்பின்னால்
                    நல்ல   வன்போல்   நடிக்கிறான் !                       (எனக்கு)


                    பழகத்   துடிக்கும்   நண்பனே
                    பார்த்துப்   பழகு   நண்பனே
                    பயனெண்   ணாமல்   பண்பினோடு
                    பகையை   வெல்வாய்   நண்பனே !                     (எனக்கு)                                                                                                                                                                      - இராதே