இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வவ்வால்


வானம் பார்த்துத் தலைக்கீழாய்
     வசமாய்த் தொங்கிப் பகல்போக்கும்;
காணும் பார்வை குறைவினால்
     கடக்கக் கேளா மீயொலியைப்
பேணும் நுட்பம் கைக்கொண்டே
     பேரு லகெங்கும் சுற்றிவரும் ;
ஊணும் கொள்ளும் வாய்வழியே
     உரமாய் மாற்றி தரும்வெளியே !

பறவை இனத்தில் 'பாலூட்டி'
     பழங்கள் உண்ணும் 'பழந்தின்னி'
நிறத்தில் சிவப்பு பழுப்புண்டு ;
     நெடிய இரவின் 'கைச்சிறகி'
உறவாம் குட்டியை அரவணைக்கும் ;
     உறிஞ்சி மலர்த்தேன் குடித்துய்யும் ;
பறந்து பயிர்கள் மேய்வதினால்
     பாரில் வேளாண் எதிரியிது !

மருந்து செய்ய இவ்வினத்தை
     மாய்த்தே பணத்தைப் பார்க்கின்றார் ;
விருந்து படைக்க வாவலினை
     வேட்டை யாடி அழிக்கின்றார் ;
இருந்து வாழும் வசிப்பிடங்கள்
     இல்லா நிலைகள் தொடர்வதினால்
திரும்ப வவ்வால் கிடைத்திடுமோ ?
     திண்டா டிடுமே இவ்வுலகம் !

சுற்றுச் சூழல் காக்கவிதை
     துப்பும் வாவல் வழியெங்கும் ;
பற்றும் மலரின் மகரந்தப்
     பரல்கள் கடத்தி வனம்வளர
முற்றும் உதவும் வவ்வால்கள்
     முகமோ நரிபோல் குவிந்திருக்கும் ;
இற்றே வவ்வால் வீழாமல்
     இனத்தை மீட்போம் வாருங்கள் !

                                                               - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக