இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

மரவட்டை
வட்ட வட்ட வளையங்கள்
     வனைந்த உருளை மரவட்டை ;
தொட்ட உடனே சுருண்டிடும்
     துப்பும் பீச்சும் நச்சினை ;
நெட்டை உணர்வுக் கொம்புகள்
     நிலைமை அறிய உதவிடும் !

பத்து நூறு கால்களில்
     பதமாய் ஊறும் மரவட்டை ;
மெத்து மெத்தாம் இலைகளை
     மென்றுத் தின்னும் மரவட்டை ;
சத்து சத்தாய் உரங்களைச்
     சால தருமே மரவட்டை ;
கத்தை கூரை விழலிலே
     காணப் படுமே மரவட்டை !

ஈர மான சூழலில்
     இயங்கும் உயிரி மரவட்டை ;
ஆர மாக சுருளுமே
     ' அழுக லுண்ணி' மரவட்டை ;
சாரை சாரை யாகவும்
     சந்து பொந்தில் ஊர்ந்திடும் ;
கூரை சன்னல் தரைகளில்
     கூடி வாழும் மரவட்டை !
                                                      - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக