இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 29 நவம்பர், 2024

அலையும் இசையும்


 "அலையும் இசையும்"


தித்தித் தை தை தை

   அழைத்ததே அலை !

தித்தித் தோம் தோம் தோம்

   தெறித்ததே இசை ! ( தித்தித் தை )


அலையழகா ? நுரையழகா ?

   அலைஓதும் இசையழகா ?

வளையருளும் சங்கினங்கள்

   வந்தொதுங்கும் கரையழகா ?

நிலையில்லா ஆட்டத்தில்

   நின்றாடும் படகழகா ?

வளைசேரும் நண்டுகளின்

   வண்ணநடை சீரழகா ?


          அழகிய லுலவிடுங் கடற்கரை பொழிகிற

             அசைவுக ளெழுதிய நினைவுகள் வலம்வர

          பழகிய மொழிதனில் கவிதைகள் துளிர்விட

             பறபற பறவென இதயமே சிறகிட


சிந்தின சிந்தின செந்தமிழே !

சிந்தையில் வந்தன பைந்தமிழே !

சிந்தின சிந்தின செந்தமிழே !

சிந்தையில் வந்தன பைந்தமிழே !

வந்தனம் கூறிய

முந்திய சந்தத்தில்


தித்தித் தை தை தை

   அழைத்ததே அலை !

தித்தித் தோம் தோம் தோம்

   தெறித்ததே இசை ! ( தித்தித் தை )


                - இராதே

தின்னுற சோறு


 ஆனந்த களிப்பு


      தின்னுற சோறு


தின்னுற தின்னுற சோறு - துருத்தித்

தின்னுற தின்னுற தின்னுற சோறு


என்னென்ன ஏதென்ன செய்தாய்? - ஒன்றும்

   இல்லாமல் உண்டுண்டு தொப்பை வளர்த்தாய் ;

நன்னெறி யேதும் இல்லாதே - நனி

   நயமின்றி வாழ்வினை உறங்கிக் கெடுத்தாய் ! ( தின்னு )


கெடுமன ஆசைகள் கொண்டே - சுற்றிக்

   கேடுறுஞ் செயல்களைச் செய்தே கெடுத்தாய் ;

விடுவிடு தீமைகள் என்றால் - விடா

   வீண்வினைப் பழிகளில் சிக்கி உழன்றாய் !   ( தின்னு )


உழைப்பை மறந்தே திரிந்து - வெளி

   ஊர்சுற்றி ஊர்சுற்றிக் காலங் கழித்தாய் ;

பிழைப்பென ஏதொன்று மின்றி - பிறர்

   பிழைப்பினை வஞ்சித்தே நெஞ்சம் மகிழ்ந்தாய் !  ( தின்னு )


மகிழ்வென பணத்தினைப் பெருக்க - வழி

   மாறியே கள்ளத்தை மனத்திலே வைத்தாய் !

பகிர்ந்துண்டுப் பகுத்துண்ணும் வாழ்வை - விட்டுப்

  பதுக்கியே பொதுநலப் பாங்கை ஒழித்தாய் ! ( தின்னு )


ஒட்டஒழுக மறுத்தே  உலகில் - மெல்ல

   ஊடேறும் போதையாம் மதத்தை விதைத்தாய் ;

வெட்டவெட்ட வளர்சாதி நஞ்சு - செடி

   வேறூன்ற நாளுமேநீ ரூற்றி வளர்த்தாய் ! ( தின்னு )


தின்னுற தின்னுற சோறு - நீ

திருந்தாமல் தின்னாலே தின்பதே வேறு !


                          - இராதே

கார்காலம்


 ' சிந்து '


               கார்காலம்


                  எடுப்பு


பேரின்பம்  பேரின்ப  மே - தவப்

பேரின்பம்  பேரின்ப  மே


                   முடிப்பு


'வாரி'நீர் அளித்தது வான்மிசை ஈர்த்தது ;

   வான்முகில் கொட்டவே இடியுடன் ஆர்த்தது ;

'பாரி'யைப் போல்மஞ்சு வழங்கிடக் கூர்த்தது ;

   பாரெலாம்  நீர்ப்பெற 'கார்காலம்' வார்த்தது ( பேரி )


வானங் கருத்தது மின்னல் விரிந்தது ;

   வான்முகிற் கூட்டம் வளையத் திரிந்தது ;

கூனல் பிறையென நிலவுத் தெரிந்தது ;

    கூடியக் கருமுகி்ல் மழையாய்ச் சரிந்தது ! ( பேரி )


கூட்டுக்குள் குருவிகள் கூடி இணைந்தன ;

   கொண்டாடிக் கொண்டாடி மயில்கள் பிணைந்தன ;

ஓட்டிடை உருள்நீரால் முற்றங்கள் நனைந்தன ;

    ஒழுகியச் சொட்டுகள் இசைதர முனைந்தன !   ( பேரி )


செடிகள் சிரித்தன ; மலர்கள் குளித்தன ;

    தேனிதழ் வண்டுகளைப் பொந்துகள் ஒளித்தன ;

துடிப்பாய்த் தவளைகள் பாய இளித்தன ;

    துள்ளும்மீன்கள் துள்ளிக் காட்சி அளித்தன !   ( பேரி )


கடற்கரை நண்டுகள் நடனம் புரிந்தன ;

   கடலலை கல்பாறை மோதிப் பிரிந்தன ;

'சடசட' ஓசையில் 'மொக்குகள்' பொரிந்தன ;

    'தனதன' யெனமனம் தாளங்கள் சொரிந்தன ! ( பேரி )


                           -  இராதே

வியாழன், 28 நவம்பர், 2024

செப்படி வித்தை


 


           செப்படிவித்தை


                    எடுப்பு


எப்படிச்செப்படி வித்தைகள்செப்பினேன்

தப்பிலையே உள்ளத் தாள்கிறதேவா


                   தொடுப்பு


சொற்படியேஎடுத் தெப்படியாகினும்

ஒப்புடன் வந்துன்னை அன்புடன் சேரவே         ( எப்ப )


                     முடிப்பு


வாடையிலேகுளிர் ஓடையிலேநீராடையிலே உடைசூடையிலே

சாடையிலே உன்னைக் கூடையிலே சதிராடையிலே முகந்தேடலிலே        ( எப்ப )  


காலையிலே அந்தி மாலையிலே வந்த வேளையிலே பண்ணோலையிலேசெய்த 

மாலையையேந்தி மூலையிலே வண்ணச் சோலையிலே விளையாடையிலே உனக்   ( எப்ப )


                       -  இராதே

மாமழை வாழி


 உருப்படி


             மாமழை வாழி !


                   எடுப்பு


மாமழை வாழியவே வான்பொழிப் பைம்புனல்

மாமழை வாழியவே              ( மாமழை )


                   தொடுப்பு


 மாமலை மீதினில் ஆடிடுங் கார்முகில்

மருவிய அருவியாய் வீழ நிலம்புகு                              ( மாமழை )


                      முடிப்பு


ஆயிரம் ஆயிரம் நீர்வழி யாவையும்

ஆறுகள் வீறுடன் நீர்நிலைத் தேக்கிப் 

பாயும் நிலம்வெளிக் காடுகள் தேற்றி

ஓயா விளைச்சலை ஓங்கவே வார்க்கும்  ( மாமழை )


மண்ணில் தவழ்ந்து மண்ணுள் நுழைந்து

மண்ணடி நீர்வளம் மேவ செழித்து

மக்கள் பருகிட நலந்தரு அமுதென

மாண்பை யளித்தே உலகினைக் காக்கும்    ( மாமழை )


சூழ்யியல் போற்றவும்  உயிரிகள் பெருகவும்

சூழும் இயற்கை தரவுகள் மீட்கவும்

வாழ்நிலை உயர்த்தவும் வறுமையைப் போக்கவும்

வான்தருங் கொடையென 'உயிர்த்துளி' யருள்கிற      ( மாமழை )


                           - இராதே



 உருப்படி

        

         தமிழ் வாழ்த்துகள் !


               வெண்பா

அன்னைத்  தமிழே ! அமுதே ! அருமறையே !

உன்னைத் தொழுவேன் உயர்த்திடுக ! - என்றுமே

என்னுயிரே ! என்னுணர்வே ! என்செயலே ! என் வாழ்வே !

நன்றே அருள்க நலம்.


                 எடுப்பு


 வாழ்த்துகள் சொல் மனமே - எழில்நிறை

 வாழ்த்துகள் சொல் மனமே.


               கண்ணிகள்


வாழ்வை உயர்த்திடும்

    மாண்புளந் தந்திடும்

ஆழ்நிலை அறிவினை

      அளித்திடும் தமிழுக்கே (வாழ் )


முந்தி முளைத்திட்ட

    மூத்த தமிழ்க்குடி

வந்து வழங்கிட்ட

    வண்டமிழ் மொழியினிற்கே ( வாழ் )


சிந்தை மகிழ்ந்திடும்

    செம்மொழி வளத்திற்கே

சந்தம் பொழிந்திடும்

    தண்டமிழ் மொழியினிற்கே  ( வாழ் )


கல்தோன்றி மண்தோன்றாக்

    காலத்தே முன்தோன்றி

எல்லா எதிர்ப்பையும்

    எதிர்கொண்ட தமிழுக்கே ( வாழ் )


மூவேந்தர் பாவேந்தர்

    முறையாய் வளர்த்திட்ட

பூவேந்தும் பொற்கொடியாம்

    பொற்றமிழ் மொழியினிற்கே  

( வாழ் )


வண்ண தொல்காப்பியம்

    வான்புகழ் திருக்குறள்

எண்ணற்ற இலக்கியங்கள்

    இயம்புசெந் தமிழுக்கே  ( வாழ் )


எந்நாளும் தமிழினம்

    எப்போதும் தலைநிமிர

தந்தாளும் திறமருளும்

    தாய்மொழியாம் தமிழுக்கே  ( வாழ் )


                  - இராதே