உருப்படி
தமிழ் வாழ்த்துகள் !
வெண்பா
அன்னைத் தமிழே ! அமுதே ! அருமறையே !
உன்னைத் தொழுவேன் உயர்த்திடுக ! - என்றுமே
என்னுயிரே ! என்னுணர்வே ! என்செயலே ! என் வாழ்வே !
நன்றே அருள்க நலம்.
எடுப்பு
வாழ்த்துகள் சொல் மனமே - எழில்நிறை
வாழ்த்துகள் சொல் மனமே.
கண்ணிகள்
வாழ்வை உயர்த்திடும்
மாண்புளந் தந்திடும்
ஆழ்நிலை அறிவினை
அளித்திடும் தமிழுக்கே (வாழ் )
முந்தி முளைத்திட்ட
மூத்த தமிழ்க்குடி
வந்து வழங்கிட்ட
வண்டமிழ் மொழியினிற்கே ( வாழ் )
சிந்தை மகிழ்ந்திடும்
செம்மொழி வளத்திற்கே
சந்தம் பொழிந்திடும்
தண்டமிழ் மொழியினிற்கே ( வாழ் )
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே முன்தோன்றி
எல்லா எதிர்ப்பையும்
எதிர்கொண்ட தமிழுக்கே ( வாழ் )
மூவேந்தர் பாவேந்தர்
முறையாய் வளர்த்திட்ட
பூவேந்தும் பொற்கொடியாம்
பொற்றமிழ் மொழியினிற்கே
( வாழ் )
வண்ண தொல்காப்பியம்
வான்புகழ் திருக்குறள்
எண்ணற்ற இலக்கியங்கள்
இயம்புசெந் தமிழுக்கே ( வாழ் )
எந்நாளும் தமிழினம்
எப்போதும் தலைநிமிர
தந்தாளும் திறமருளும்
தாய்மொழியாம் தமிழுக்கே ( வாழ் )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக