இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 29 நவம்பர், 2024

தின்னுற சோறு


 ஆனந்த களிப்பு


      தின்னுற சோறு


தின்னுற தின்னுற சோறு - துருத்தித்

தின்னுற தின்னுற தின்னுற சோறு


என்னென்ன ஏதென்ன செய்தாய்? - ஒன்றும்

   இல்லாமல் உண்டுண்டு தொப்பை வளர்த்தாய் ;

நன்னெறி யேதும் இல்லாதே - நனி

   நயமின்றி வாழ்வினை உறங்கிக் கெடுத்தாய் ! ( தின்னு )


கெடுமன ஆசைகள் கொண்டே - சுற்றிக்

   கேடுறுஞ் செயல்களைச் செய்தே கெடுத்தாய் ;

விடுவிடு தீமைகள் என்றால் - விடா

   வீண்வினைப் பழிகளில் சிக்கி உழன்றாய் !   ( தின்னு )


உழைப்பை மறந்தே திரிந்து - வெளி

   ஊர்சுற்றி ஊர்சுற்றிக் காலங் கழித்தாய் ;

பிழைப்பென ஏதொன்று மின்றி - பிறர்

   பிழைப்பினை வஞ்சித்தே நெஞ்சம் மகிழ்ந்தாய் !  ( தின்னு )


மகிழ்வென பணத்தினைப் பெருக்க - வழி

   மாறியே கள்ளத்தை மனத்திலே வைத்தாய் !

பகிர்ந்துண்டுப் பகுத்துண்ணும் வாழ்வை - விட்டுப்

  பதுக்கியே பொதுநலப் பாங்கை ஒழித்தாய் ! ( தின்னு )


ஒட்டஒழுக மறுத்தே  உலகில் - மெல்ல

   ஊடேறும் போதையாம் மதத்தை விதைத்தாய் ;

வெட்டவெட்ட வளர்சாதி நஞ்சு - செடி

   வேறூன்ற நாளுமேநீ ரூற்றி வளர்த்தாய் ! ( தின்னு )


தின்னுற தின்னுற சோறு - நீ

திருந்தாமல் தின்னாலே தின்பதே வேறு !


                          - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக