இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 29 நவம்பர், 2024

கார்காலம்


 ' சிந்து '


               கார்காலம்


                  எடுப்பு


பேரின்பம்  பேரின்ப  மே - தவப்

பேரின்பம்  பேரின்ப  மே


                   முடிப்பு


'வாரி'நீர் அளித்தது வான்மிசை ஈர்த்தது ;

   வான்முகில் கொட்டவே இடியுடன் ஆர்த்தது ;

'பாரி'யைப் போல்மஞ்சு வழங்கிடக் கூர்த்தது ;

   பாரெலாம்  நீர்ப்பெற 'கார்காலம்' வார்த்தது ( பேரி )


வானங் கருத்தது மின்னல் விரிந்தது ;

   வான்முகிற் கூட்டம் வளையத் திரிந்தது ;

கூனல் பிறையென நிலவுத் தெரிந்தது ;

    கூடியக் கருமுகி்ல் மழையாய்ச் சரிந்தது ! ( பேரி )


கூட்டுக்குள் குருவிகள் கூடி இணைந்தன ;

   கொண்டாடிக் கொண்டாடி மயில்கள் பிணைந்தன ;

ஓட்டிடை உருள்நீரால் முற்றங்கள் நனைந்தன ;

    ஒழுகியச் சொட்டுகள் இசைதர முனைந்தன !   ( பேரி )


செடிகள் சிரித்தன ; மலர்கள் குளித்தன ;

    தேனிதழ் வண்டுகளைப் பொந்துகள் ஒளித்தன ;

துடிப்பாய்த் தவளைகள் பாய இளித்தன ;

    துள்ளும்மீன்கள் துள்ளிக் காட்சி அளித்தன !   ( பேரி )


கடற்கரை நண்டுகள் நடனம் புரிந்தன ;

   கடலலை கல்பாறை மோதிப் பிரிந்தன ;

'சடசட' ஓசையில் 'மொக்குகள்' பொரிந்தன ;

    'தனதன' யெனமனம் தாளங்கள் சொரிந்தன ! ( பேரி )


                           -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக