கண்ணதாசன் வாழ்க !
உள்ளகத்தில் ஊற்றெழுந்து ஊறுகின்ற வாய்வழித்
துள்ளுகின்ற பாடலேற்றித் தூய்மைசெய் மனத்தினை
அள்ளகின்ற அற்புதங்கள் ஆயிரம் மொழிந்தவன் ;
கள்ளவிழ்ந்து தேன்சுமந்து காவியம் படைத்தவன் ! ( 1 )
முத்தமி ழெடுத்துவார்த்தை மோகனம் இசைத்தவன் ;
சத்துளக் கவிதைகொண்டு சந்தங்கள் வடித்தவன் ;
தத்துவ மெருகையேற்றித் தமிழினைப் பொழிந்தவன் ;
எத்துறை நுழைந்தபோதும் ஏற்றமேற்றம் ஏற்றமே ! ( 2 )
காதலூறும் சாரமேற்றிக் கானங்கள் படித்தவன் ;
சாதல்மீதும் பற்றுவைக்கும் தத்துவம் உரைத்தவன் ;
மோதலாலே முன்னும்பின்னும் முரண்களை உதிர்த்தவன் ;
வேதகீதம் பாடிப்பாடி வேள்விகள் வளர்த்தவன் ! ( 3 )
மெட்டினிற்கே ஏற்றபாடல் மேன்மையைத் தொடுத்தவன் ;
கட்டளைக் கிணங்கிவண்ணக் கருத்துகள் விதைத்தவன் ;
பட்டஇன்ப துன்பமெல்லாம் பாடலில் புனைந்தவன் ;
கொட்டுகின்ற அருவிபோலக் கொடுத்தபாக்கள் ஆயிரம் ! ( 4 )
மின்னிமின்னி மேலெழும்பும் மெய்சிலிர்க்கும் வரிகளால்
எண்ணியெண்ணிச் சீரமைந்த எண்ணமென்னும் விழிகளால்
உண்ணஉண்ணக் கவிதைதந்த உயர்ந்தவர் வழியிலே
தன்னினைவில் லாமலென்னைத் தந்தவிட்டேன் கவியிலே ! ( 5 )
கண்ணைமூடிக் கற்பனைத்தேன் கவிதைசொட்ட தந்தவன் ;
விண்ணைமுட்டும் புகழினுச்சில் விழுமியம் அடைந்தவன் ;
எண்ணிலாத விருதுவெற்றி இடைவிடாது பெற்றவன் ;
கண்ணதாசன் பெருமையென்றும் கோடிகோடி கோடியே ! ( 6 )
- இராதே