மலைப் பிரேதசங்களில்
வலம் வராதே
உன்
தொடு உணர்வில் கூச்சப்பட்டு
நெளிந்து குலுங்கியதில்
உன்
பார்வைப்பட்டதும் இளக
தொடங்குகின்றன
பாறைகள்
உன்
பாதம்பட்டால். . . .
அழத்தொடங்கிவிடும்
அருவியாய் !
பாதையில்
கிடக்கும் முட்களுக்கு
உன்
பாதம் குத்தியதில்
மோட்சம் கிடைக்கிறது !
இரத்தத் துளிகளால்
சுத்தமாகிறது !
கோபத்தில்
என் உதடுகள்
முட்களைச்சபிக்கின்றன
அவள்
சரிந்ததில்
மனசு தருகிறது
சாபவிமோசனம்
முட்களுக்கு !
நீ
தடம்பதித்த பாதைகளில்
காலடிச் சுவடுகளை
நான் வருடிப்பார்க்கிறேன்
என்னை
முட்டித்தள்ளி
முந்தப் பார்க்கிறது
காற்று !
அண்ணாந்து வளரும்
மூங்கில் கூட
உன்னைப் பார்த்தது
அவசரத்தில் குனிந்து
அலோ என்கின்றது !
ததும்பும் கள்ளுறிஞ்ச
தவம் கிடக்கும்
தேனீக்கள்
உன்
இதழோரம்
வார்த்தைகள் வழிந்ததும்
நகர மறுக்கின்றன
நனைந்த ஈக்களாய் !
மென்மையின் மேன்மையால்
கர்வப்பட்டு
காற்றில் மிதக்கும்
இறகுகள்
உன்னை
உரசியதால்
நாணப்பட்டு
தரையிறங்குகின்றன !
மலைமுகடுகளில்
உன்
வருகையால்
மேகங்களின் கூட்டம்
அலை மோதுகின்றன
உன்
மேனி தழுவி
தங்களின்
மென்மையைத்
தரம் பிரித்துக்கொள்ள !
தோற்ற மேகங்கள்
கூட்டம் கூட்டமாய்
மூட்டம் போட்டு
தேம்புகின்றன
மலைச் சாரலாய்!
போதும் போதும்
உன்
புறப்பாடு
பொழுதிற்கு முன்னே
இறங்கிவிடு
பாவம் நிலா
தற்கொலை முனையில்
தவம் கிடப்பதாய்க்
கேள்வி!
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக