காளை
எடுப்பு
சீறுங்காளை
சீண்டவருங் காளை;
முறுக்குக் கொம்பால்
முட்டவருங் காளை;
குறுக்க மறுக்க
சுழட்டிவரும் வாலை;
சறுக்கி டாமல்
துரத்திவரும் ஆளை ! ( சீறு )
முடிப்பு
ஊறும் இரத்தம்
உதிர குடலை
நாறு நாறாய்
நறுக்கி சரிக்கும் ;
ஏறும் வேகம்
இறங்கி குதிக்கும்
தாறு மாறா
புழுதி கிளப்பும்
தடுக்க வந்தவன் முடுக்க வந்தவன்
நெடுக்க வந்தவன்
எடுக்க வந்தவன்
சதையைப் பிரிச்சி
கதையை முடிச்சி
அனுப்பும்
காளை ! காளை ! ( சீறு )
வாடி வாசல்
' ஏறு தழுவி '
கூடி ஆடி
' மஞ்சு விரட்டி '
நாடி ஓடி
' சல்லி கட்டு '
தேடி பிடிச்சும்
அடங்கா காளை
தெறிக்க விட்டவன் தெரிந்து விட்டவன்
சிரிச்சி விட்டவன் சிலிர்த்து விட்டவன்
சுருக்க மிரட்டி
தூர விரட்டி
அனுப்பும்
காளை ! காளை ! ( சீறு )
- இராதே