இதயத்தைத் தின்னாதே
எடுப்பு
துளிகளை ஏனோ
எண்ணுகிறாய் ?
சும்மா இதயத்தைத்
தின்னுகிறாய் !
வலிகளில் வஞ்சம்
பின்னுகிறாய் !
வதைக்கும் அன்பிலே
மின்னுகிறாய் ! ( துளி )
தொடுப்பு
எளியவன் மீதே ஏக்கங்கள்
ஏனடி ?
இன்பத்திலே வந்த துன்பங்கள்
தானடி ! ( துளி )
முடிப்பு
அடைபட்ட தென்றல் மீண்டும்
நடைபோட்டு தீண்டித் தீண்டி - மேனி
ஊடும்
இடைதொட்ட கூந்தல் ஓடி
எடைத்தட்டாய் ஆடி ஆடி - விளை
யாடும்
கடையோட்ட கண்கள் தேடி
விடையின்றிக் கூடிக் கூடி - களம்
ஆடும்
வளைபோட்ட கைகள் கொஞ்சி
வடம்போட்டு கெஞ்சிக் கெஞ்சி - சிந்து
பாடும் ! ( துளி )
மலர்த்தொட்டு மலரை விட்டு
மயக்கங்கள் வந்து கண்டு - தல்
ளாடும்
உலர்வாடை காற்றும் முட்டி
உறக்கத்தைத் தட்டித் தட்டித் - துண்
டாடும்
வளர்உந்தல் மெல்ல தூண்டி
வருடங்கள் வேண்டி வேண்டி - நின்
றாடும்
இளமொட்டு நெஞ்சில் விட்டே
இணைந்தூறும் மின்னும் எண்ணம் - திண்
டாடும் ! ( துளி )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக