அவனைத் திருத்தாதே !
அவனைத் திருத்தாதே
அப்படியே விட்டுவிடும் ;
ஆழ்ந்த ஊழலிலே
அமிழ்ந்தே உழலட்டும் ;
ஆசை பித்தனவன்
அடங்காப் பெருமனத்தான் ;
காசைப் பார்ப்பதற்கே
காசினியில் வாழ்கின்றான் ;
ஓசை யில்லாமல்
உளமறியத் திருடுகிறான் !
என்ன இழிப்பிறப்போ !
ஏழ்பிறப்பும் கள்மனமோ ?
கண்முன்னே களவாடிக்
காசுபணம் ஈட்டுகிறான் ;
எண்ணிப் பார்க்கையிலே
எல்லாமுந் தன்னலந்தான் ;
தன்னை உயர்த்திடவே
தப்பாட்டம் ஆடுகிறான் !
கள்ளப் பணம்பெற்ற
காரணத்தால் மகிழுங்கால்
பொல்லாச் சிறைவருமோ ?
பொல்லாப்பு உடன்வருமோ ?
எல்லா வல்வினையும்
எதிர்கொண்டு துரத்திடுமோ ?
தொல்லைத் தொடர்ந்திடுமோ ?
துணைகள் விலகிடுமோ ?
எதையும் பாராமல்
எண்ணியதே இலக்கென்றே
இதயம் இல்லாமல்
இழிச்செயலில் உறவாடிப்
புதையும் மண்பதையில்
பொருளே உயர்வென்றே
கதையும் கதைக்கின்றான்
களிப்பில் மிதக்கின்றான் !
கோடிக் கதிபதியாய்க்
கோபுரமாய் வீடமைக்கக்
கூடிக் கொள்ளையிட்டுக்
கொக்கரித்து திரிகின்றான் ;
நாடி வரும்நல்லோரை
நயமாய் நஞ்சூட்டி
கேடில் விழாச்செய்தே
கைக்கொட்டிச் சிரிக்கின்றான் !
நண்பர் இடித்தாலென்ன ?
நல்லுரைகள் நவின்றாலென்ன ?
இன்பம் பணமென்றே
எள்ளி நகையாடுகிறான் ;
உண்பது ஒருநாழி
உடுப்பது ஒருமுழம்
என்ப தெல்லாமவனுக்கே
ஏறா மதியுடைமை !
அவனைத் திருத்தாதே
அப்படியே விட்டுவிடும் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக