கமலாப் பழம்
உடலை உறுதி ஆக்குமாம்
ஊளைச் சதையை நீக்குமாம் ;
குடலின் புண்கள் ஆற்றுமாம்
குடலின் நுண்மி போக்குமாம் ;
படருந் தோலில் கருமையும்
பட்டென் றோடி மறையுமாம் !
தொடருந்து கசக்கும் வாயினைத்
துரத்தித் தீர்க்கும் கமலாவாம் !
தூக்கம் இன்மை மறைந்திடும்
தொற்றுப் பரவல் தணிந்திடும் ;
ஊக்க மாக நுரையீரல்
உழைக்கத் தெம்புக் கூட்டிடும் ;
வீக்கம் உள்ள ஈறுகள்
விரைந்து வாடச் செய்திடும் ;
தாக்கும் கண்நோய் விடுபட
தகுந்த மருந்து கமலாவாம் !
குருதிக் கொழுப்புக் குறைந்திடும்
குளிர்ச்சி உடலைத் தழுவிடும் ;
பெருகும் வயிற்றுப் போக்கினைப்
பெருகா வண்ணம் நிறுத்திடும் ;
பருக்கள் முகத்தின் புள்ளிகள்
பதற ஓட்டும் பழமிதாம் ;
தருமே தரமாய் மருத்துவம்
தகுதிப் பழமாம் கமலாவே !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக