நறுவல்லி (89) (மூக்குச்சளி பழம்)
நறுவல்லி நறுவல்லிப் பழமே
நலம்பல நிறைவாகத் தருமே ;
சிறுநீரை எளிதாகப் பிரிக்கும்
சிறுநீரின் குழல்நோயைத் தடுக்கும் ;
உறுத்துகிற குடற்புழுக்கள் அழிக்கும்
உடலெழும் எடைகூட பெருக்கும் ;
மறுதலிக்கும் மலத்தினை இளக்கும்
மருந்தேதான் நறுவல்லிப் பழமாம் !
உடலுக்கும் குளிர்ச்சியை அளிக்கும்
உடலதன் சோர்வினை முறிக்கும் ;
உடல்தோல் சுருக்கங்கள் நீக்கும்
உடல்படு தொழுநோயைப் போக்கும் ;
உடல்தோலில் மினுமினுப்புத் தோன்றும்
உடலெழில் இளமையைக் கூட்டும் ;
குடலுறும் நோய்களைத் தீர்க்கும்
குணங்கொண்ட நறுவல்லிப் பழமே !
தொண்டைநோய் ,குரல்கம்மல் அடக்கும்
தொண்டையுறும் வறட்சியும் விலக்கும் ;
மண்ணீரல் கல்லீரல் வீக்கம்
மண்டியிட் டோடோடச் செய்யும் ;
கண்வலி,வெட்டைநோய்த் துரத்தும்
கல்லீரல் நச்சுக்களை விரட்டும் ;
நன்மைதனைக் கொடையாகப் பொழியும்
நறுவல்லி மூக்குச்சளிப் பழமே !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக