களாக்காய் ( 83 )
அடிவயிற்றின் வலியைப் போக்கும்
ஆட்டமிடும் அழற்சி நீக்கும் ;
துடிக்கின்ற இதயத் தசைகள்
துடிப்பாக்க வலிமை கூட்டும் ;
கடிபல்லின் ஈறில் தொடர்ந்துக்
கசிகின்ற குருதி நிறுத்தும் ;
நொடிப்பொழுதில் மூளைத் திறனின்
நுட்பங்கள் உயர்த்துங் களாக்காய் !
கருவிழியின் படலப் பிணியைக்
கண்டித்தே கட்டுப் படுத்தும்
கருப்பையின் அழுக்கைக் கழுவக்
களாக்காயின் வேரே உதவும் ;
கரும்புள்ளி, தோலின் அரிப்பு
காதடைப்பு, காற்றின் தொல்லை
அருகியே ஓட்டம் பிடிக்கும்
அருமருந்துக் காயே களாக்காய் !
குடற்புண்கள் , காய்ச்சல் மறையும்
குமட்டல்கள் ,வீக்கம் குறையும் ;
உடலிலுள்ளத் தொற்றின் பரவல்
உடனடியாய் மாய்த்து விரட்டும் ;
உடல்பித்தம் மெல்லத் தணிக்கும்
உட்புறத்தில் உறுப்பைக் காக்கும் ;
அடங்காத வேட்கைத் துரத்தும்
அளவோடே தின்போம் களாக்காய் !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக