பதநீர்
பனையின் பாளைச் சீவிடப்
பரவி நுனியில் வடியும்நீர் ;
பனையின் பாளை நீருக்குப்
பதமாய்ச் சுண்ணம் கலந்திடப்
பனையின் பதநீர்க் கிடைக்குமே
பருக இனிப்பாய்ச் சுவைக்குமே ;
பனையின் பதநீர் உடலினைப்
பார்த்துப் பார்த்துக் காக்குமே !
உடலுங் குளிர்ச்சி அடைந்திடும்
உடலின் மெலிதல் சீர்ப்படும் ;
இடறும் மூலச் சூட்டினை
இதமாய்க் கடுமை தணித்திடும் ;
படரும் புண்கள் கொப்பளம்
பற்கள் ஈறு சிக்கலும்
தொடர விடாமல் தடுத்திடும்
தொண்டின் சிகரம் பதநீரே !
தேயும் எழும்பும் தேறிடும்
சிறுநீர்க் கடுப்பும் மாறிடும் ;
பாயும் வியர்வை அகற்றியே
படியுங் கழிவை விலக்கிடும் ;
மாயும் மலத்தின் சிக்கலும்
மயக்கும் சோர்வுந் தீர்ந்திடும் ;
நோயும் நொடியும் மாய்த்திடும்
நுகர்வோர் மகிழும் பதநீரே !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக