நுங்கு
நுங்கு நல்ல நுங்கு
நோண்டித் தின்னும் நுங்கு ;
தங்கும் குடலின் கழிவைத்
தள்ளும் வெளியே நுங்கு
பொங்கும் அம்மை நோய்கள்
போக்குங் குளிர்ந்த நுங்கு ;
மங்கும் குருதிச் சோகை
மாற்ற வல்ல நுங்கு !
வேர்வைக் கட்டி நீக்கும்
வேண்டும் பசியைத் தூண்டும் ;
சோர்வை முற்றுந் துரத்தும்
சோம்பல் முறித்து விரட்டும் ;
பார்வை நோய்கள் அகற்றும்
பாழுங் கொழுப்பைக் கரைக்கும் ;
நீர்மச் சத்து நுங்கு
நேர்த்தி மருந்து நுங்கு !
வேட்கை அடங்க உதவும்
வெயிலில் மயக்கம் அறுக்கும் ;
நுட்பப் புற்றின் அணுக்கள்
நுழையா வண்ணந் தடுக்கும் ;
திட்ப மார்புப் புற்றைத்
திடமாய் எதிர்த்து நிற்கும் ;
நட்பின் உணவாம் நுங்கு
நம்மைக் காக்கும் நுங்கு !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக