இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

 பனி

( காவடிச் சிந்து )
விண்ணூ ரிடம் பிறந்த
மின்னா ரொளி படைத்த
விலைவயி ரக்கொடை
மிகுமகு டத்துறை கற்களே ! - அதை
விடியலு றும்பொழுது
நெடுதலை யேற்றிடும் புற்களே !
பொன்னா மிளிர்த் துளிகள்
கண்ணா மொளித் தொழுகும்
பொழிலுறும் புத்தணி
அழகினை இட்டிடும் முத்திதோ ? - நுகர்
புதுமணம் முந்திடும்
குளிர்தரு வெள்ளரி வித்திதோ ?



வெண்பொன் துகள் பரவல்
கண்முன் படர் சரிகை
விழிஉவ கைப் பெரும்
வரைஉடை நுரைமிகும் போர்வையோ ? - பனி
மெருகிட மென்சிலிர்
குளுகுளு தந்திடும் பார்வையோ ?
மென்பஞ் செனப் பரவும்
வெந்தஞ் சியும் மறையும்
வியனுறு வெண்பனி
நழுவுத லின்புறும் நெஞ்சமே ! - புவி
விழுமிய தென்முனை
வடமுனை மென்பனி மஞ்சமே !


நீரா வியுங் குளிரும்
சீரா கவும் படரும்
நெடுமலை யில் நிகழ்
உறைபனி அண்டிடும் திண்மமாம் ! - அது
நிறைபடு நன் நதி
நிலைபெறும் என்பதும் தொன்மமாம் !
ஆறா வெயில் எரிய
ஆறா கிடும் பனியும்
அலைதலு டன் சில
பரவையும் பன்மடங் குயருமாம் ! - வையம்
அழிபடும் துன்பமும்
துயரமும் மண்டுட அயருமாம் !

- இராதே

பரவை : கடல்
அயர் : வருத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக