இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

                   கம்பன்

( காவடிச் சிந்து )

( கண்ணன் வருகின்ற நேரம் )

கம்பன் தருகின்ற பாடல் - சுவை
கூடல் - வண்ணங்
கண்டு மொழிந்திடும் ஆடல் - இசை
காற்றிக்கிடை ஊடுங்குழல்
ஊற்றுக்கண் ணூறும்படி
காணுந் தமிழ்த்திறம் பாரும் ! - மொழி
ஞானம் எல்லாம்மெல்ல சேரும் !



அம்பின் நளினமிட் டோடும் - கவி
பாடும் - அறம்
அண்டி அண்டிவிளை யாடும் - எழில்
அழகோவியம் சதிராடிட
மழைபோல்மனங் குளிராகிட
அள்ளி அள்ளிப்பாக்கள் சூடும் ! - சந்தம்
துள்ளித் துள்ளித்தாளம் போடும் !



கம்பன் கவிக்கிணை இல்லை - உண்டோ
எல்லை ? - என்று
கற்ற வருங்கேட்குஞ் சொல்லை - மக்கள்
கனவாயிது நினைவோயென
மனமீதினில் கருத்தூன்றிடக்
கண்டு மகிழ்ந்திடச் செய்வார் ! - புகழ்
கம்பன் இசையினில் உய்வார் !


தெம்பு தரும்நன்மை சேர்க்கும் - தீமை
தோற்கும் - இன்ப
செந்த மிழின்தேனை வார்க்கும் - ராமன்
சிறப்பூறிடும் பெருங்காதையில்
அறப்போரிடுந் தமிழ்மாக்கவி
தீந்த மிழ்த்தொண்டுகள் செய்தார் ! - நல்ல
சிந்த னைப்பாவியம் நெய்தார் !

- இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக