காவடிச் சிந்து
மண வாழ்த்து அன்பின் அணைப்பினில் மிளிர்ந்தே - இணை ஒளிர்ந்தே - உளங் குளிர்ந்தே - மகன் ஆசை மணங்கொண்டே தெளிந்தே - தெய்வ அருள்பெற்றிட உயர்வுற்றிட திருநின்றிட நலமொன்றிட ஆனந்தத் திளைப்பினில் உன்னை - வாழ்த்தி தேனெனக் களிப்பேனிவ் வன்னை ! அன்பு ' வினோத்ராசு ' இன்பன் - உயர் பண்பன் - பழகும் நண்பன் - துயர் அண்டாமல் காத்திடும் அன்பன் - வாழ்வில் அமுதச்சுவை மனமொற்றிட குமுதக்குலம் அடியொற்றிட அன்றிலி ணை'அரிப் பிரியாள்' - மனம் ஒன்றியே பேசிடும் நெறியாள் ! சுந்தர புன்னகை வீசி - காதல் பேசி - நேயம் பூசி - ஆன்றோர் சுற்றங்கள் கூறும் ஆசி - என்றும் சுகமேவிடச் சுவையூரிட நகமோடிணை சதையாகியே சொந்தங்கள் மெச்சிட வாழ்க ! - வையம் சொக்கிட இன்பங்கள் சூழ்க ! மந்திர வாழ்த்துகள் தாவ - பூக்கள் தூவ -நெகிழ்ச்சி ஏவ - மன்ற மக்கள் உவகையில் மேவ - உறவு வடிவாகியே மாலைபோலெழ விடிவாகிட அலைபோலெழ மங்கல மாண்புகள் பூண்க ! - வளம் தங்கிடும் இல்லமே காண்க ! ( திருமதி மங்களம் அன்பழகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்கள் இல்ல மணவிழா வாழ்த்து ! 14.11.2018 ஆம் ஆண்டு திருவிடைமருதூரில் நடைபெற்ற மணவிழா நிகழ்வில் வழங்கப்பெற்றது )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக