இராதே

இராதே
eradevadassou

வியாழன், 26 ஜூலை, 2012

காற்று !

என்னைத்     தெரிகிறதா ?  -  நான்
யாரென         புரிகிறதா  ?
கண்ணில்     புலப்படா     திருந்திடுவேன் ;
கமக்கமாய்   நாசியில்       புகுந்திடுவேன் !                                 (என்னை)



மெல்ல          அறைக்குள்    நுழைந்திடுவேன் ;
மேனி             சிலிர்க்கக்      குளிர்ந்தெழுவேன் ;
மேசையில்   பொருட்கள்   கலைத்திடுவேன்  -ஒளிர்
மெழுகின்       சுடரை          அணைத்திடுவேன் !                         (என்னை)



அசையும்      கதவுகள்          என்னாலே ;
இசையும்       எழுந்திடும்     என்னாலே ;
விசையும்      இயங்கிடும்   என்னாலே  -அதில்
விளையும்     பயன்களும்   என்னாலே !                                      (என்னை)



வேலிகள்    ஏதுமே      எனக்கில்லை ;
போலிகள்   கூட            எனக்கில்லை ;
மாளிகை     குடில்கள்    சமமெனக்கு  -  பெருங்
கோலியாம்   புவியே    குடியெனக்கு !                                        (என்னை)



மலரின்       வாசமாய்       மணந்திருப்பேன் ;
உலர்மீன்   வாடையைச்    சுமந்திருப்பேன் ;
குளிரும்     வெப்பமும்          ஏற்றிருப்பேன்  -  ஆலை
அலறும்     சங்காய்           ஒலித்திருப்பேன் !                              (என்னை)



உதைபடும்        பந்தின்     உள்ளேநான் ;
ஊதிய          பலூனின்       உருவம்நான் ;
உருளும்      வண்டியின்   ''டயரு''ள்ளே  -  அதன்
உயிர்ப்பாய்   இருக்கும்  செயலும்நான் !                                   (என்னை)



என்னைத்    தெரியா    திருக்கின்றாய்
உன்னை   இயக்கும்   உட்பொருளாய்
முன்னே      பின்னே    மூக்கினுள்ளே  -தினம்
திண்ணமாய்   உலவும்    உயிர்நானே  !

                                                                        -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக