குளம்
( மா- மா - காய் )
பச்சைப் பட்டை நெய்ததுபோல்
பாசி படர்ந்த மேல்விரிப்பு ;
நச்சே இல்லா நீர்ப்பாம்பு
நகலாய்த் தோன்றும் பூமொட்டாய் ;
இச்சை கொண்ட தவளைகளோ
இயல்பாய்த் தாவி நீர்க்கலக்கும் ;
'அச்சோ' அவற்றை நீரரவம்
அழகாய் கவ்வி விழுங்கிவிடும் !
'பாசை' அகற்றிப் பார்த்தாலோ
பளிங்கு போல நீர்தெரியும் ;
ஓசை யெழுப்பும் அதனலைகள்
ஒதுக்கும் செத்தை குப்பைகளை ;
மீசை இறால்அ, மீன்கூட்டம்
மேலே துள்ளி விளையாடும் ;
ஆசை யோடு பொரிதூவி
அழகின் அழகைச் சுவைத்திடுவோம் !
கெண்டை கெளுத்தி பெருங்குரவை
கேட்பா ரற்று மிகுந்திருக்கும் ;
நண்டின் நடனம் கரையோரம்
நாளுங் களிக்க நடந்தேறும் ;
தண்டின் மேலே தாமரைப்பூ
தண்ணீர் தவழும் அதனிலைகள்
வண்டுகள் சுற்றித் தேன்குடிக்கும்
வற்றா தூறும் எம்குளமே !
மொத்தம் மூன்று படித்துறைகள்
மூழ்கித் ததும்பும் நீர்மட்டம் ;
நித்தம் நிற்கும் வெண்கொக்கு
நீண்ட நேரந் தவமிருக்கும் ;
சத்தம் இன்றி மீன்கொத்த
சலிப்பே இன்றிக் காத்திருக்கும் ;
புத்தம் புதிய கரைப்பூக்கள்
புன்ன கையோடே அதைநோக்கும் !
மேட்டில் பசுக்கள் நின்றபடி
மெல்ல குனிந்து நீரருந்தும் ;
ஓட்டின் சில்லை யெறிந்துவிட
ஓடும் நெளிந்து நீர்வளையம் ;
நீட்ட மான தூண்டிலிலே
நெளியும் புழுவை மாட்டிவிட்டு
வாட்டமான இடம் பார்த்து
வாகாய் அமர்ந்தே மீன்பிடிப்போம் !
தக்கை யடித்த மறுநொடியில்
தத்த ளிக்கும் மீன்தெரியும் !
பக்க வாட்டில் 'பறி'தனிலே
பறித்தே அதனைப் போட்டுவைப்போம் ;
தக்கை மரத்தில் சிறுபடகைத்
தவழ விட்டே அகமகிழ்வோம் ;
சிக்கிக் கொண்டால் சிரித்தபடி
சிக்கல் நீக்கிச் சிறகடிப்போம் !
ஊற்று தானாய்ப் பொங்கியெழும்
ஒவ்வொரு மூலையில் கிணறிருக்கும் ;
கீற்றைப் பின்ன மட்டைகளும்
கிடக்கும் ஊறிக் குளத்தினிலே ;
ஏற்றம் போட்டு நீரிறைப்பார்
எங்கும் பாயும் வாயல்வெளியில்
நாற்று நட்டு நெல்விளைய
நன்றே பாய்ச்சல் தருங்குளமாம் !
படிகள் ஒட்டி நீர்ப்பரப்பில்
பறக்கும் சிறிய பூச்சிகளைப்
பிடித்தே தின்ன நாநீட்டிப்
புலன்கள் தீட்டிப் பார்த்தபடி
கொடிகள் இலைகள் நடுவினிலே
கொம்பேறி மூக்கன் கொலுவிருக்கும் ;
அடிகள் மெதுவாய் எடுத்துவைத்தே
அசைந்தே ஆடி வரும்ஓணான் !
படியில் லாத கரையோரம்
பழத்தைக் கொடுக்கும் மரமிருக்கும் ;
கடித்தே அணில்கள் துப்புவதைக்
கவ்விப் பிடிக்க மீன்களெழும் ;
வடிவில் சிறிய 'நக்குவாரி'
வழங்கும் குலைகள் தண்ணீரில்
படிந்துத் தேய்ந்தே உருண்டாடும்
பார்க்க பார்க்க இனிமைதரும் !
நயமாய் நின்ற நினைவுகளை
நானும் நினைத்தே அசைபோட்டேன் ;
செயலில் மிகுந்த தன்னலத்தால்
செத்துப் போச்சே குளங்கூட ;
செயற்கை நிறைந்த உலகத்தில்
செழிக்கும் வளத்தை அழித்திட்டோம் ;
இயற்கை தந்த இனியவரம்
இன்று காணாப் பெருந்துயரம் !
- இராதே