முந்தியே முட்டித் தள்ளி
மூடிய கிண்ணம் சாய்த்துச்
சிந்திடும் பாலை உண்டு
செப்பமாய்க் குழைத்து வாலை
உந்தியே சண்டை யிட்டே
உறக்கத்தைக் கலைக்கும் நோக்கில்
பொந்திடை வெளியே வந்த
பூனையின் குடும்பம் ஒன்று !
குட்டிகள் ஐந்து னோடே
குலாவிடும் இணையும் தாயும்
தொட்டியில் குதித்தே ஏறித்
துள்ளியே ஓட்டம் ஓடி
எட்டியே பார்க்கும் அந்த
எலிகளை வேட்டை யாட
பெட்டிகள் மீதே தாவிப்
பிடித்திடும் ஆட்டம் கண்டேன் !
கட்டிலில் கிடக்கும் என்மேல்
கவினுறு குட்டிப் பாய்ந்துச்
சட்டெனக் காலை நக்கிச்
சாலவே உரசி நோக்கும்
பட்டெனக் காலைத் தூக்கிப்
பற்றியே மார்பைக் கீறிச்
சிட்டென மறையும் ஆங்கோர்
சீறிய சின்னக் குட்டி !
மேசையின் நிலைக்கண் ணாடி
மீதேற முயலும் ஒன்றே
ஓசையோ டந்த ஆடி
உடைந்தது 'தூள்தூள்' ஆக
மீசையை உயர்த்திக் காட்டி
'மியா'வென எழுப்பும் சத்தம்
ஆசையைக் கூட்டி என்னை
அழைத்ததே அடுத்த குட்டி !
அட்டியிட்ட டுக்கி வைத்த
அழகான நூல்கள் தம்மை
தட்டியே சரித்து விட்டுத்
தாய்ப்பூனை மடியி னூடே
சுட்டியாய் ஒளிந்தி ருக்கும்
சூட்டிகை யான குட்டி
கொட்டிய நூல்கள் தாண்டிக்
குதித்தோடும் தாயும் ஆங்கே !
குட்டிகள் ஐந்தும் தாயும்
கூத்தாடும் செயல்க ளெல்லாம்
பட்டிய லிட்டுப் பாங்காய்ப்
படம்போல மனத்துள் ளோடி
கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ள
கேலியை எண்ணி மீண்டும்
வெட்டியாய்ச் சிரித்தேன் என்னுள்
வேடிக்கை யானக் காட்சி !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக