இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 7 ஜனவரி, 2025

பட்டிமன்ற வேழம்

 காவடிச் சிந்து


பட்டிமன்ற வேழம் !


முத்தமிழ் கோவிந்த ராசர் - அன்பில்

ஈசர் - பண்பின்

வாசர் - வைர

முத்து கவிஞரின் நேசர் - உறவின்

முதலாகிய திருமால்மகன்

இதமாகியே பழகுங்குணம்

முந்திடும் நட்பிற்கோர் சிகரம் - ராசு

தந்திடும் பாத்துள்ளும் மகரம் !


மெத்த சொற்சிலம்பம் ஆடி - பொய்மை

சாடி - வாகை

சூடி - புகழ்

மேன்மை யுறும்படி கூடி - பல

மிளிர்மேடைகள் ஒலிவாங்கிகள்

ஒலிக்கும்படி அதிரும்வெடி

வெல்லும் பட்டிமன்ற வேழம் - இவர்

சொல்லுங் கருத்துகள் ஆழம் !


புத்தம்புதுப் பாக்கள் படைப்பார் - பழமை

உடைப்பார் - பகையைப்

புடைப்பார் - சிறுமை

பொங்கும் வழிகளை அடைப்பார் - குற்றம்

புரிவோர்தமைத் தவறேயென

அறியும்படி உரைவீச்சுகள்

பொழியும் வழக்குரை அறிஞர் - தமிழ்

வழியும் இலக்கிய நெறிஞர் !


சித்திர சிவகாமி சூடன் - கொள்கை

நாடன் - மொழி

வேடன் - எளிமை

சேர்த்திடும் நல்லோர்க்குச் சீடன் - தி.கோ

திருமேவிட நலமேபெற

அருள்கூடிட வளமேயுறச்

செப்பிடும் இராதேவின் சிந்து - வாழ்த்து

எப்பவும் மேலிடும்உ வந்து !


             - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக