தயிரைத் தேக்கி உரியில் தொங்கும்
தாழி போல தோன்றுந் தொப்பை ;
வயிற்றின் அடியில் மெல்ல படியும்
வளமை மிகுந்த செழுமை குப்பை ;
பயிற்சி முயற்சி சிறிதும் இன்றி
பதமாய்ச் சோம்பல் வளர்க்கும் தொம்பை ;
பயின்று முனைந்தால் மறையும் என்று
பார்த்துப் பார்த்தே இழப்போம் தெம்பை !
இடையில் கூடும் ; இடுப்பின் மடிப்பாய்
இயல்பின் அழகைக் கெடுக்கச் சேரும் ;
தொடையில் குவிந்தே நடக்க முடியாத்
தொல்லைப் பெருக்குந் துயரம் நேரும் ;
தடையாய் மாறி கரையா திருந்தே
தவிக்கும் வாழ்வே நாளும் ஊறும் ;
அடைந்துத் தூர்ந்தே குருதி ஓடும்
அகலங் குறைந்து குழலுஞ் சோரும் !
மூச்சும் இறைக்கும் உடலில் வியர்வை
முழுதும் பொங்கி ஊற்றாய் முந்தும் ;
கூச்சம் மண்டி ; வெளியில் போக
குரங்கு மனமும் கண்ணீர் சிந்தும் ;
பேச்சுங் குறையும் ; கவலை பெருகிப்
பிறழும் மதியும் அடங்கிக் குந்தும் ;
வீச்சே இல்லா மாந்த ராகி
வெறுப்பே நெஞ்சில் குதித்து நீந்தும் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக