அரச மரம்
( விளம் - மா- மா )
ஓடிடும் அணில்கள் தொங்கி
ஊஞ்சலாய் ஆடும் வௌவால் ;
பாடிடும் குயில்கள் வானம்
பாடியின் இசையுங் கேட்கும் ;
கூடிடுங் காலை மாலை
குருவிகள் கூட்டம் அங்கே ;
தேடிடும் இரவில் கோட்டான்
திகிலுற அலறும் ஆந்தை !
கனிகளைக் கொத்தித் தின்னக்
கருக்களில் கிளிகள் கூடும் ;
பனிமலர் சிந்துந் தேனை
பருகிட எறும்பும் ஊறும் ;
இனிமைகள் நிறைந்த கூட்டில்
இறகினைக் கிளிகள் ஆற்றும் ;
நனிசுவை இரையை ஊட்ட
நலம்பெற வளருங் குஞ்சே !
கூட்டிடை முட்டை தன்னைக்
குடித்திடப் பாம்பும் ஏறும் ;
நோட்டமாய்ப் பருந்து நோக்கும்
நொடியினில் பாம்பைத் தூக்கும் ;
நீட்டமாய்க் கிளைஉச் சத்தில்
நெருப்பெனக் கொட்டுந் தேனீ
வாட்டமாய்க் கூட்டைக் கட்டி
வான்சுவைத் தேனைச் சேர்க்கும் !
அந்தியில் மஞ்சள் வெயில்
அழகினை இலைக்குத் தீட்டும் ;
மந்தியின் ஆட்டம் மிஞ்ச
மரக்கிளை ஒடியும் வீழும் ;
பொந்திடை உறங்கும் ஆந்தை
புறப்படும் இரவில் மெல்ல
சந்திடை எலிகள் ஓடச்
சற்றெனப் பற்றித் தின்னும் !
கொத்திடக் குளத்து மீனைக்
குத்திகள் காத்து நிற்கும் ;
மத்தள ஓசை தோற்க
மரங்கொத்திப் பறவை கொத்தும் ;
கத்திய கருடன் கீழே
காக்கையின் குஞ்சைக் கவ்வும் ;
சத்தமாய்க் கரைந்து காகம்
தன்னினம் அழைக்கும் ஏங்கும் !
ஆட்டிடுந் தலையை ஓணான்
அறுந்தவால் அரணை ஓடும் ;
கேட்டிடுங் கௌளி தாளம்
கிறங்கிடும் இணையுந் தேடும் ;
மாட்டுடை உறுப்பின் எச்சம்
மரத்தினில் தொங்கும் மக்கள்
வீட்டிலே அடுப்பை மூட்ட
விழுந்திடுஞ் சுள்ளி தேறும் !
தொங்கிடுங் கிளையைப் பற்றித்
துள்ளிடுஞ் சிறுவர் கூட்டம் ;
தங்கிய கரிமக் காற்றைத்
தன்னுளே உறிஞ்சும் உண்ணும் ;
பொங்கிடும் உயிரின் மூச்சைப்
பொறுப்புடன் உலகிற் கீயும் ;
வங்கிபோல் தொண்டு செய்யும்
வாழ்விலே நன்மை பேணும் !
அளவிலாக் கிளைகள் கொண்டே
அடர்த்தியின் திண்மங் காட்டும் ;
உளவினை நிலவு பார்க்க
ஒளியினை உள்ளே பாய்ச்சும் ;
விளக்கமே இல்லா தாகி
விருட்டென நிலவு செல்லும் ;
அளவிட முடியா எங்கள்
அழகுடை அரசே வாழ்க !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக