இராதே

இராதே
eradevadassou

வியாழன், 2 ஜனவரி, 2025

போலி !

 போலி


கருத்தினை மறந்தே கொள்கை

   கரைத்ததை நீரில் விட்டு

விருதுகள் அடைய வேண்டி

   வேட்கையில் விலைகள் பேசி

நெருங்கிய நண்பர் ஊடே

   நெருக்கிடும் அழுத்தம் தந்தே

பருந்தெனக் குறியாய்ப் பார்த்துப்

   பரிந்துரை செய்யக் கோரி


நடுவரை நாடிச் சென்றே

   நயம்பட மடக்கி நாவால்

தொடுத்திடும் சொற்கள் கொண்டு

   தொழுதிடத் தாள்கள் பற்றி

விடுத்திடும் விருப்பம் செப்பி

   விரைகழல் சரணம் என்றே

எடுத்திரு கைகள் கூப்பி

   இறைஞ்சியே அழுது நின்று


தருகவே விருது பட்டம் 

   தயவதைக் காட்டச் சொல்லி

இருப்பிடம் சுற்றி வந்தே

   எடுபிடி பணிகள் ஆற்றி

உருகியே பிச்சை யேந்தி

   ஒருவழி யாகப் பெற்று

மருகியே புகழில் வேகும்

    மனிதரின் மதிப்புப் போலி !


                    - இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக