பொங்கல் !
காவடிச்சிந்து
(பொன்னுலவு சென்னிகுள - மெட்டு)
அஞ்சேலென ஏர்பிடித்தே
கொஞ்சும் வளை கைப்பிடித்தே
அள்ளஅள்ள விதைநெல்லுந் தந்துமே - களை
அகற்றிடக் கைகளெல்லாம் முந்துமே - நிலம்
ஆழஉழுதிட சேரநீர்விட
தாழஎருவிட ஆர்ந்தசெம்பயிர்
அள்ளிக்கட்ட நெற்கதிர்கள் உந்துமே - உழவர்
துள்ளியெழப் புன்னகையுஞ் சிந்துமே !
இஞ்சிமஞ்சள் செங்கரும்பு
நஞ்சையில் முளைத்தநெல்லு
எங்குமே விளைச்சலாகி அண்டுமே - தைத்
திங்களிலே உன்கவலைச் சுண்டுமே - கடல்
ஈனும்மஞ்சுவின் வானுலாவிலே
காணும்மாமழை மீறிப்பெய்திட
ஏகபோக நல்மகசூல் கண்டுமே - இயற்கை
ஈகையாலே செல்வவளம் மண்டுமே !
அச்சுவெல்லம் பச்சரிசி
மெச்சுகிற புதுப்பானை
அச்சிறிய அடுப்பினி லேற்றியே - பாலை
'உச்சு'கொட்டிப் பானையிலே ஊற்றியே - பெரும்
ஆரவாரமாய்ப் பானைமீதெழும்
தீரமாநுரை சேர்ந்துபொங்கிட
அன்புநிறை பொங்கலொலி முற்றியே - பேணும்
இன்பநிலை பரவிடுஞ் சுற்றியே !
உச்சகட்டப் பண்பினோடே
இச்சையோடே செந்தமிழர்
ஒத்தநல்ல செயல்களைக் கூட்டியே - இன
ஒத்துழைப்பை நெஞ்சினிலே நாட்டியே - வானில்
ஓடுஞாயிறும் ஊறுமாமுகில்
பீடுவான்மழை யாவுமேபெற
உண்மையோடே நன்றிகளைச் சூட்டியே - மகிழ்வு
எண்ணங்களை உலகிற்குக் காட்டியே !
மேயுங்காளை சீறுங்காளை
பாயுங்காளை தாவுங்காளை
மீறியே வாடிவாசல்கண் ஓடுமே - திடல்
ஏறியே வளைந்துவளைந் தாடுமே - வீரம்
மேவிபீறிட வீரர்யாவரும்
தாவித்தாவியே காளைமாட்டினை
வெல்லுங்காட்சி வீரவாகை சூடுமே - அதை
சொல்லிசொல்லி தமிழினம் பாடுமே !
சாயும்மாலை வண்டிக்கட்டி
வேயுங்குருத் தோலைக்கட்டி
சல்லிக்கட்டு மாடுகளைப் பூட்டியே - அட
மல்லுக்கட்டி வீதிகளில் ஓட்டியே - கையில்
சாட்டைநீண்டிட சந்துபொந்தெலாம்
பாட்டைபோட்டுடன் சேட்டைமேலிட
தள்ளுமுள்ளு ஆட்டங்களுந் தீட்டியே - உள்ளந்
துள்ளித்துள்ளு மேநெகிழ்வை மீட்டியே !
ஓடியாடிப் பாத்திக்கட்டி
பாடிபாடி நீரிறைத்தே
உண்ணுஞ்சோறு விளைநல்நி லங்களே - தமிழ்
வண்ணம்பாடி மகிழுந்தைத் திங்களே - மக்கள்
ஒன்றுசேர்ந்துமே காணும்பொங்கலில்
அன்பைவேண்டியே சேருஞ்சொந்தங்கள்
உள்ளமெலாம் களிப்போமே நாங்களே - நன்றி
சொல்லுகிற நாள்தான்தைப் பொங்கலே !
நாடிநாடி நெல்லறுத்தே
தேடிதேடி தானுழவர்
நல்லுழைப்பில் அறுவடை நெல்விழா - இன்பம்
எல்லோருமே சிரித்திடும் பல்விழா - துன்பம்
நைந்துமாய்ந்திட திண்மைபெருகிட
மெய்மைஓங்கிட பொய்மைவீழ்ந்திட
நம்தமிழர் போற்றுகிற தொல்விழா - என்றும்
நம்மரபை நிறுவிடும் நல்விழா !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக