காலை
(விளம் - மா - மா)
செங்கதிர் விரியும் வானில்
சிவப்பினை மெழுகும் மெல்ல
பொங்கிடும் நுரையோ பூத்துப்
பொத்தென அலைகள் சாயும்;
தங்கிடும் சோழி சிப்பி
சங்குகள் ஒதுங்கிச் சேரும்;
'அங்கியாம்' கருக்கல் பைய
அவிழ்ந்திடக் காலை தோன்றும் !
திங்களோ பணிகள் ஓய்ந்துத்
திரும்பிட எத்த னிக்கும் ;
தெங்கிலே தொங்கும் பாளை
தெளிவுடன் சிரிப்பைக் காட்டும் ;
பங்கிடும் இரையைக் குஞ்சு
பறவைகள் முந்தித் தின்னும் ;
கங்குலின் கருமை தேய்ந்து
காலையே வெளுப்பாய்த் தோன்றும் !
பூந்தளிர் சிந்தும் தேனோ
பூவிதழ் வழியே சொட்டும் ;
மாந்திட வண்டின் கூட்டம்
வரிசையின் அளவை நீட்டும் ;
நீந்திடும் திருக்கை வாளை
நீள்கடல் மேலே துள்ளும் ;
ஏந்திடும் முகில்தன் கையில்
எழுந்திடும் பரிதி காலை !
வெண்பனி நனைக்கும் புல்லை
வெடுக்கென பூக்கும் முல்லை
கண்மணி கருவைக் காக்கும்
கடமைசெய் இமையைப் போலேத்
தன்பணி இயற்கை சுற்றம்
தழுவியே காலை தோன்றும்
நின்பணி கடமை யாற்றி
நிறைவினைக் கொள்ளல் வேண்டும் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக