இராதே

இராதே
eradevadassou

புதன், 22 ஜனவரி, 2025

புன்மை உலகைப் புதைப்பாய் !

 புன்மை உலகைப் புதைப்பாய் !


கொலைகளவு மதுமங்கை கொடுந்தொழிலில் உழல்கின்ற

நிலைகண்ட சிறுமதியர் நிறங்கண்டு நிலையான

சிலைபோல இருக்காமல் சிறுத்தையெனச் சினம்பொங்கித்

தலைகொய்யத் திறங்கொண்டு கொலைவாளை எடுத்தெழுவாய் !


முனிவர்போல் நடிக்கின்ற முறையற்ற அடியார்கள் 

வனிதையரின் உயர்கற்பை வதைக்கின்ற வருத்தங்கள்

இனிநாட்டில் நடவாமல் இருக்கின்ற வகைசெய்ய

தனிமனித ஒழுக்கங்கள் தழைக்கின்ற நிலையெடுப்பாய் !


கலப்படங்கள் செயுங்கொடியோர் கடத்தல்கள் புரிகின்றோர்

நிலங்களெலாம் மனையாக்கி நிலவணிகம் நடத்துபவர்

கலங்கடிக்கும் தடிகுண்டர் களங்கண்டே உளமகிழ்வோர்

நலங்கெடுக்க உதைகொடுத்து நரம்பறுத்துக் குரல்நெறிப்பாய் !


பழச்சுவையாம் வளர்கல்வி பணங்காய்க்கும் மரமாகக்

குழந்தையர்கள் நுனிநாக்கில் குலாவுகிற மொழியூட்டி

வழங்கிவரும் வெறிச்செயலில் வளர்கின்ற தலைமுறைகள்

இழக்கின்ற இடர்தவிர்க்க இனங்கொண்டு பகைமுடிப்பாய் !


இலங்கையிலே தமிழர்கள் இனமழிய  உயிரழித்த

விலங்கனைய கயவர்கள் வினையறுக்கச் சிலிர்த்தெழுவாய்

புலமைமிகு தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் இழிமதியர்

குலங்கெடுத்துக் குவலயத்தில் குழிதோண்டிப் புதைத்திடுவாய் !


நனிதமிழர் பழகுவழி நயமுடனே சிறந்தெழவே

கனிந்தபழம் குறளோனின் கருத்துவிதை முளைத்தெழவே

அணிவகுத்துத் திரண்டெழுந்தே அறங்காக்கப் புறப்பட்டே

இனிமையுறு பொதுமைநலன் இயல்பமையப் படைத்திடுவாய் !


                                    - இராதே

                                  நவம்பர் 2008


(  கலிவிருத்தம்

   அளவடி

   அடிக்கு 4 சீர் காய்ச்சீர்

    முன்றாஞ்சீர் மோனை

    காய்முன் நிரை - கலித்தளை )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக