இராதே

இராதே
eradevadassou

புதன், 13 நவம்பர், 2013

தவளை

குட்டை  குளங்கள்  நிலங்களில்
          குதித்துத்  தாவி  ஓடிடும் - தன்
முட்டைக்  கண்கள்  இரண்டையும்
         மூடி  மூடித்  திறந்திடும் !
திட்டை  மேகந்  திரண்டதும்
          திளைத்துக்  கூச்சல்  போட்டிடும் - வான்
கொட்டும்  மழையின்  வரவினை
          குரலொ  லித்துக்  காட்டிடும் !


முட்டை   யிட்டே  இனத்தினை
          மூழ்கும்  நீரில்  பெருகிடும் - அதன்
குட்டிக்  குட்டி  முட்டைகள்
          குட்டை  நீரீல்  பொரிந்திடும் !
சுட்டி  மீன்கள்  உருவிலே
          சுற்றிச்  சுற்றிந்  திரிந்திடும் - நீள்
தட்டை  வாலும்  மறைந்திட
          தவளை  வடிவம்  தெரிந்திடும் !


வேட்டை   யாடும்  மனிதர்கள்
          விற்கும்  பொருளில்  சேர்ந்திடும் - ஊண்
கூட்டைக்  காக்கும்  மருத்துவக்
          கூறும்  ஆய்வில்  அழிந்திடும்!
சேட்டை  செய்யும்  சிறுவனின்
          சில்லாக்  கோலில்  சிக்கிடும் - நீள்
சாட்டை  வடிவ  பாம்பினம்
          தாக்கும்  இரையாய்  மாய்ந்திடும் !


தீட்டும்  தீய  செயல்களால்
          திரளும் இயற்கை  மரித்திடும் - பல
நாட்டின்  சுற்றுச்  சூழல்கள்
          நாளும்  நசிந்து  கெட்டிடும் !
கோட்டை  விட்டு  வருந்திடும்
          கூசும்  நிலைமைத்  தொடர்ந்திடும் -நூல்
ஏட்டைக்  கொண்டு  நுணலினை
         இயம்பும்  காலம்  வந்திடும் !
                                                                                       -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக