இராதே

இராதே
eradevadassou

சனி, 16 நவம்பர், 2013

தொப்பி

தலையில்  சூடும்  தொப்பி ;
          தருமே  தோற்றம்  தொப்பி ;
மலையில்  மகுடம்  போல
          மதிப்பைக்  கூட்டும்  தொப்பி ;
கலையும்  முடியை  அடக்கி
          கட்டுக்  குள்ளே  வைக்கும் ;
அலையும்  வெயிலில்  தலையை
          அனலி  லிருந்து  காக்கும் !


கொட்டும்  மழையி  லிருந்தும்
          குல்லா  தலையைக்  காக்கும் ;
குட்டுங்  கைகள்  தடுக்க
          குல்லா  கவச  மாகும் ;
மொட்டை  வழுக்கைத்  தலையை
          மூடி  அழகு  காட்டும் ;
பட்டுத்  துணியில்  தொப்பி ;
          பருத்தித்  துணியில்  தொப்பி !


கதரில்  குல்லா  தைத்து
          காந்தி  தந்த  தொப்பி ;
உதவும்  உள்ளம்  நேரு
          உடுத்திக்  கொண்ட  தொப்பி ;
பதமாய்ச்  செய்த  தொப்பி ;
          பாங்காய்  அமைந்த  தொப்பி ;
இதமாய்  மூங்கில்  பட்டை
          இறுக  பிணைந்த  தொப்பி !


திரளும்  திறமை   யூடே
          திகைக்குங்  கலையின்  நுட்பம்
புரளும்  வேலைப்  பாட்டில்
          புதிய  புதிய  தொப்பி ;
வரமாய்  நமக்கு  வந்தே
          மகிழ  உதவும்  தொப்பி ;
தரமாம்  தொப்பி  குணத்தைத்
          தரணி  காக்கக்  கொள்வோம் !
                                                                           -இராதே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக